Monday 23 May 2016

"நானறிந்த சுஜாதா" - ஒரு பதிவு

குவிகம் இலக்கிய வாசலின் பதின்மூன்றாவது நிகழ்வாக "நானறிந்த சுஜாதா" பனுவல் புத்தக நிலைய அரங்கில் மே 21, சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் திரு.சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பும் செய்தார்.
.


மூத்த எழுத்தாளர் "நகுபோலியன்" அவர்கள் தனது   சிறுகதையினை வசித்தார்.






சுஜாதாவின் நாடகமான "மாறுதல்" திருவான்மியூர் ஆனந்த் குடியிருப்பு குழந்தைகள் ஒரு குறுநாடகமாக . திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அவர்கள் இயக்கத்தில் எல்லோரும் பாராட்டும் வகையில் அரங்கேற்றினார்கள். 
(ஆயிரம் நாடகங்களில் பங்கேற்ற திரு தமிழ்த்தேனி, உட்கார்ந்தவாறே ஒரு காட்சியினை கண்முன் நிறுத்தமுடியும் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னது இந்த நாடகம் கொடுத்த அனுபவத்தை நன்கு தெரியப்படுத்துகிறது)




"தமிழ்த்தேனி" அவர்களின் 'அம்மா' மற்றும் 'கன்னியாகுமரி' என்னும் இரு கவிதைகளால் அவையை அலங்கரித்தார்.




சுஜாதா அவர்களிடம் பக்தி என்றே சொல்லக்கூடிய வகையில் ஈடுபாட்டால்  'சுஜாதா தேசிகன்' என்று மாறிவிட்ட தேசிகன் அவர்கள் சுஜாதாவின் எழுத்துக்களுக்குள் நுழைந்த கதையினையும், அமரர் சுஜாதாவின்  வியத்தகு பார்வையும் பழகும் முறையினையும் கூறி எழுத்தாளராகவே நாமறிந்த அவரை ஒரு மாபெரும் மனிதனாகவும் கண்முன் நிறுத்தினார்.


ஜெயராமன் ரகுநாதன் அவர்கள் பிரமிப்பு அடையும் வாசகனாக எழுத்துக்களையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவரது படைப்புகளைக் கொண்டே விவரித்து அனைவரின் மனதிலும் சுஜாதாவை மறுவாசிப்பு செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தினார்.



தொடர்ந்து பங்குபெற்றோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். திரு கிருபானந்தனின் நன்றிநவிலலுடன் இனிய மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.


முகநூலில் இந்த நிகழ்ச்சி பற்றிய எழுதியுள்ள  டாக்டர் பாஸ்கரன், திரு சுஜாதா தேசிகன் மற்றும் திரு ஜெயராமன் ரகுநாதன்  ஆகியோருக்கும் நமது நன்றி.   ( பதிவுகள்காண  )        

"நானறிந்த சுஜாதா" - முகநூல் பதிவுகள்

Bhaskaran Jayaraman
குவிகம் - இலக்கியவாசல் நடத்திய ' நானறிந்த சுஜாதா ' வித்தியாசமாய் இருந்தது. அவருடனேயே இருந்து, அவரையும் அவர் எழுத்துக்களையும் சுவாசித்த தேசிகன் அவர்களின் உரையாடல் ஆத்மார்த்தமானது. அமைதியாக, ஆழமாக அவர் அசைபோட்ட நிகழ்வுகள், அவரது மனதில் சுஜாதா உறைந்து போயிருப்பதைக் காட்டின. எழுத்துக் கூட்டி தமிழ் படித்தவரை, சிறுகதை எழுதுமளவுக்கு சுஜாதாவின் எழுத்தும்,மனிதமும் மாற்றியிருப்பதை அலங்காரமின்றிக் கூறினார் ! அவரது சிறுகதையை, சுஜாதா செதுக்கியதை சுவையாகச் சொன்னார் - அதுவே ஒரு சிறுகதை வாசிப்பதைப் போல் இருந்தது! சுஜாதாவின் மறுபக்கம் - எழுத்தாளனைத் தாண்டிய சுஜாதா என்னும் மனிதனின் பக்கம் - தேசிகனின் வார்த்தைகளில் அழகாகவும், அறிவார்த்தமாகவும், அன்பு சேர்ந்ததாகவும் இருந்தது! சுஜாதா வாசகர்கள் பொறாமைப் படுவதில் அர்த்தம் இருக்கிறது!!
ரகுநாதன் ஜெயராமன், தன் ' வாத்யார் ' பற்றி - அவரது எழுத்துகளைப் பற்றி, கடந்த,நிகழ்,எதிர்காலச் சிந்தனைகளைப் பற்றி - அவரது படைப்புகளில் இருந்து பல பகுதிகளைச் சொல்லி, அசத்தினார்! அவர் ஒரு சுஜாதா ' ready reckoner ' - சுஜாதா என்ற பெயரைக் கேட்டாலே முகத்தில் ஒரு செண்டிமீட்டருக்கு பிரகாசம் அப்புகிறது ! இல்லாத அத்தை பற்றிய தன் முப்பத்தாறு வரிக் கவிதையை வாசித்துவிட்டு, ' கடைசி ஒரு வரியைத் தவிர - இங்கே ஒரு pause - மற்ற வரிகளை நீக்கிவிடலாம் ' என்றாராம் ! சுஜாதாவுக்கு விருதுகளோ, ஒரு அங்கீகாரமோ கொடுக்கப் படாததில் வருத்தப் பட்டார். சுஜாதா வருத்தப் பட்டிருக்க மாட்டார் என்பது என் எண்ணம் - அவரது வாசகர் வட்டமும், அவரது அறிவின் வீச்சும், எழுத்தின் தாக்கமும் எந்த ஒரு விருதினையும் விட மிக, மிக, உயர்ந்தது !
எழுத்தாளர் நகுபோலியனின் சிறுகதை, தமிழ்த்தேனியின் தாய் பற்றிய கவிதைகள் நேரம், தரம் இரண்டுக்கும் உட்பட்டிருந்தன !
சுஜாதாவின் ' மாறுதல் ' நாடகத்தை நான்கு சுட்டிகள் - நான்கும் பெண் குட்டிகள் ! - அமர்ந்தவாறு நடித்து அமர்க்களப் படுத்தின ! என்ன மாடுலேஷன், உச்சரிப்பு - சபாஷ் !
இனிமையாய்க் கரைந்தது ஒரு மாலை வேளை - சுஜாதா என்னும் icon என்றுமே வசீகரம் நிறைந்தது !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பு நான் அறிந்த சுஜாதாஎன்ற தலைப்பில் நேற்று என்னையும்Jayaraman Raghunathan பேச அழைத்திருந்தார்கள். பேசுவதற்கு முன் சின்ன குழந்தைகள் சுஜாதாவின் மாறுதல் வரும்என்ற நாடகத்தை உட்கார்ந்தே தேர்ந்த நாடக நடிகர்கள் போல பிசகு இல்லாமல் நல்ல மாடுலேஷனில் நடித்துக் காட்டினார்கள். பூர்ணம் நடிப்பது போலவே இருந்தது. ஜெயராமை கிட்டதட்ட பத்து ( இல்லை அதற்கு மேலும் இருக்கலாம் ) வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்.
ஹலோஎன்று கைகொடுத்தேன் யார் சார் நீங்க?’ என்பது போல பார்த்தார். கைவசம் இருந்த ஆதார்அட்டையைக் காண்பித்த பிறகு தான் நான் தேசிகன் என்று நம்பினார்.
ஜெயராம் ஒன்பதாவது படித்த போது சுஜாதாவிற்கு எழுதிய கடிதம், சுஜாதாவின் பல சிறுகதைகளிலிருந்து அவர் கையாண்ட நடை என்று பொலந்துக்கட்டினார். ராமாயணம் எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது அதே போல இருந்தது ஜெயராம் பேச்சு.
குவிகம் திரு சுந்தராஜன், திரு கிருபாநந்தன் இருவரும் வங்கியிலிருந்து ரிடையர் ஆனவர்கள் அவர்கள் மாதம் ஒரு முறை இந்த மாதிரி இலக்கிய நிகழ்வுகளை நடத்துகிறார்கள். வேறு சில இலக்கிய நிகழ்வுகளும் பார்த்திருக்கிறேன் ஆனால் அவை எல்லாம் ஹோட்டல் சாப்பாடு மாதிரி இவர்களும், புத்தக நண்பர்கள் நடத்தும் நிகழ்வுகளும் வீட்டுச் சாப்பாடு மாதிரி வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.
சுஜாதா நாடகத்தை நடித்த குழந்தைகள் யார் சுஜாதாஎன்று கேட்டார்கள். குழந்தைகளைக் குற்றம் சொல்ல கூடாது.
தேவன், கல்கி, எஸ்.வி.வி போன்றவர்களை மறந்துவிட்டோம், சுஜாதாவிற்கும் அந்த நிலமை வந்துகொண்டு இருக்கிறதே என்று பயமாக இருக்கிறது. ஷேக்ஸ்பியர் யார் என்று தெரிந்த இந்தக் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தாளர்கள் பற்றி சொல்லித்தர வேண்டாமா ? தமிழ் கூறும் நல் உலகம் திராவிட கட்சிகளின் ஹிந்தி எதிர்ப்புக்குப் பிறகு வெறியோடு ப்ராத்மிக் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 10, +12 மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற வெறியோடு படிக்கிறார்கள், ஆனால் பிற்காலத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லாமல் அவர்கள் ஒரு நல்ல campanionனை இழக்கப் போகிறார்கள் என்பது நிஜம். CBSE படிக்கும் தமிழ் உலகம் தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதாகக் கருதுவதில்லை. எங்கள் குடும்பத்தையே எடுத்துக்கொண்டால் அடுத்த தலைமுறையினர், நல்ல படிக்கிறார்கள், உலக விஷயம், ஆங்கிலம் என்று பல விஷயங்கள் தெரிகிறது ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது ஆங்கிலத்தில் இருந்து தான் திருப்பாவையே மனப்பாடம் செய்கிறார்கள் என்பது தான் சோகமான உண்மை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Jayaraman Raghunathan
நானறிந்த சுஜாதா தேசிகன்!!
நேற்று நடந்த குவிகம் நானறிந்த சுஜாதாபற்றி தேசிகன் எழுதிவிட்டார்.அவரேஎழுதினால் மாதிரி ரத்தினச்சுருக்கமாக.
ப்ரெவிடி இல்லேன்னா கயை ஒடிஎன்பார் வாத்யார். அவரிடம் அட்சரயாப்யாஸம் பயின்ற விற்பன்னர் தேசிகன். ஒரு சிறுகதை எழுதுவது எப்படி என்பதை பிராக்டிகலாக அவர் சொல்லிக்கொடுத்ததை தேசிகன் விவரித்தபோது அருகில் என் முகத்தில் ஓடிய பொறாமையை அந்த கடைசி இடது ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருந்தாரே, அவர் கூட கவனித்து இருக்க முடியும்.
தேசிகன் அவரின் ஆத்மார்த்த, அத்யந்த நண்பராக இருந்திருப்பது அவரின் முன் ஜென்மப்பயனே! அவருடன் புத்தகங்களைப்படித்து, குறிப்புக்கள் கொடுத்து, இண்டெக்ஸிங் பண்ணி, சித்திரம் வரைந்து, அபார அனுபவ ஞானம்.
இந்தக்கதையை நான் எழுதியிருகேனா என்ன, எதுக்கும் தேசிகனை ஒரு வார்த்தை கேட்டுடுங்கஎன்று வாத்யார் சொல்லுமளவுக்கு ஒரு ஆசாமி இருந்தால் பொறாமை வராதா என்ன!
டாக்டர் பாஸ்கரன ஜெயராமன் வருகை ஒரு எதிர்பாராத சந்தோஷம். அவரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
கையெழுத்திட்ட ஒரு காப்பி எனக்கு ரிசர்வ் பண்ணி வெச்சிடுங்க, டாக்டர்!
தேசிகன் சொல்லும் இந்ததமிழ் படிக்கும் வழக்கம் அருகிக்கொண்டு வருவது சோகமே! ஏதானும் செய்யவேண்டும் என்று கிருபாநந்தன் சொன்னார். இந்த குவிகம் இரட்டையர் நிச்சயம் செய்துவிடுவார்கள்.
நீ தேசிகனை மீட் பண்ணியிருக்கியோ?”
சுஜாதா என்னை ஒரு முறை கேட்டபோது இல்லை சார் என்றேன். அடுத்த முறை நீ வரும்போது நம்பர் தரேன், பேசுஎன்றார். அந்த சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. சுஜாதா இறந்த பிறகுதான் நாங்கள் சந்தித்தோம்.
ஒரே ஒரு தரம் சரவணா ஹோட்டலில் சந்தித்திருந்தாலும் இப்போது இவர் அநியாயத்திற்கு இளைத்து சிக்கென்று என்னை விட இளமையாக இருப்பார் என்று நான் எதிர்ப்பார்க்காததால் ஆதார் அட்டை வரை போக வேண்டியதாகிவிட்டது. இப்போது கூட அவர் ஆதார் காப்பிதான் காண்பித்தார். ஒரிஜினல் கேட்டிருக்கிறேன்!
என் பெயரைக்குறிப்பிட்டுமறக்க முடியாத கடிதங்கள் என்று சுஜாதா எழுதின கல்கி இதழைக்கண்டு பிடித்து (1979 என்று நினைக்கிறேன்) எனக்கே எனக்கு கொடுப்பவர்களுக்கு (ஒரு ஃபோட்டோ காப்பி எடுத்துக்கொண்டு தந்து விடுகிறேன்) என் ராஜ்யத்தில் பாதியையும் கொடுத்து என் பெண்ணையும் கல்யாணம் செய்து தருகிறேன் என்று சுஜாதா ஒரு முறை சொன்னதை நானும் இங்கேவழி மொழிகிறேன்.
மிக இனிமையான சுஜாதா சுஜாதாவெனக் குவிந்த மாலை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

அறிவிப்பு நிகழ்வு 13 "நான் அறிந்த சுஜாதா"

  

  பதின்மூன்றாம்  நிகழ்வு


"நான் அறிந்த சுஜாதா"


முன்னிலை:  சுஜாதா தேசிகன்
                          ஜெயராமன் ரகுநாதன்


கலந்துரையாடல் :

வருகை தருவோர் தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும்
   

சுஜாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும்

இம்மாதக் கதை மற்றும் கவிதை வாசிப்பும் வழக்கம் போல் 

அனைவரும் வருக 


 பனுவல் புத்தக நிலையம்,  எண். 112, திருவள்ளுவர்  சாலை, திருவான்மியூர் சென்னை  600041        21  மே   2016,
       சனிக்கிழமை,
   மாலை - 6.30 மணி
 (திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில் -       BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

முதலாம் ஆண்டு விழா


குவிகம் இலக்கியவாசலின் ஆண்டு விழா, ஏப்ரல் 23ம் தேதி அன்று சென்னை  தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் "இயல் இசை நாடகம்" என்ற தலைப்பில் அரங்கம் நிறைந்த
  திருவிழாவாகச்  சிறப்பாகக்  கொண்டாடப் பட்டது.
பள்ளிச் சிறுவர்களின் வில்லிப்பாட்டு என்னும் இசைத் தமிழுடன் நிகழ்ச்சி தொடங்கியது.



எழுத்துலக சிகரங்கள் திரு அசோகமித்திரன் மற்றும் திரு இந்திரா பார்த்தசாரதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது விழாவிற்கு மேலும் சிறப்பைக் கூட்டியது
திரு சுந்தரராஜன் தனது வரவேற்புரையில் கடந்த பன்னிரண்டு மாதங்களில் குவிகம் இலக்கியவாசல்  நிகழ்த்திய  பன்னிரண்டு  சுவையான நிகழ்ச்சிகளைப்   பற்றி விவரமாக எடுத்துரைத்தார். இலக்கியத்தில் நகைச்சுவை என்ற முதல் நிகழ்ச்சியிலிருந்து நேர்காணல், கலந்துரையாடல், புத்தக அறிமுகம், சரித்திர நாவல் படைத்த அனுபவங்கள், கவியரங்கம், புத்தக உலகம், சிறுகதை சிறுவிழா என்று இதுவரை நடந்துள்ள விவரங்களைத் தெரிவித்தார். 

திரு அழகியசிங்கர்,  திரு  மியூசிக் கண்ணன் மற்றும் திருமதி  லதா ரகுநாதன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களைப் பற்றி பேசினார்கள்.








திரு அசோகமித்திரன், திரு இந்திரா பார்த்தசாரதி இருவரும் குவிகம் இலக்கியவாசலைப் பாராட்டியதுடன்  இன்றைய இலக்கியத்தைப் பற்றித் தங்கள் கருத்துரைகளையும் எடுத்துரைத்தனர். நாடகத்தை இறுதி வரையிலும் கண்டுகளித்து தங்களுடைய பாராட்டுக்களைத்  தெரிவித்தார்கள்.

திருமதி தாரிணி கணேஷ்  நாடகமாக்கி இயக்கிய  திரு கோமல் சுவாமிநாதனின் சிறுகதையின்    "மனித உறவுகள் " பாரா ட்டுகள் பெற்றது.

 திரு கோமல் சுவாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி விஜயலக்ஷ்மி மற்றும் அவரது புதல்வன் திரு ரவியும் விழாவில் கலந்து கொண்டது மேலும் சிறப்பு. முந்திய நிகழ்வுகளை சிறப்புற நடத்திதந்த திரு பாம்பே கண்ணன், திரு ரவி தமிழ்வாணன், திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் ஆகியோரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

சிறப்புரைகள், வில்லுப்பாட்டு மற்றும் நாடகத்தின் ஒளிவடிவங்களை  இப்பதிவின் இறுதியில் காணலாம். .

இந்நிகழ்வு பற்றிய  டாக்டர். பாஸ்கரன் அவர்களின்  முகநூல் பதிவை அவரது அனுமதியுடன் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று உலகப் புத்தக நாள் ! ஷேக்ஸ்பியர் பிறந்த நாள்! குவிகம் இலக்கியவாசல் தனது முதலாண்டு நிறைவு விழாவை இயல்இசைநாடகம் கொண்ட முத்தமிழ் விழாவாகக் கொண்டாடியது. தமிழ் இணைய கல்விக் கழக அரங்கில்மூத்த எழுத்தாளர்கள்திரு இந்திரா பார்த்தசாரதியும்திரு அசோகமித்திரனும் கலந்துகொண்டு பேசினார்கள் !

பள்ளிக் குழந்தைகள்பாரதியின் கண்ணன் கவிதைகளைவில்லுப்பாட்டாகப் பாடினார்கள்! கண்ணனைக் குருவாகசேவகனாகவிளையாட்டுப் பிள்ளையாககுழந்தையாக பாவித்து பாரதியார் பாடிய கவிதைகளை அழகாகப் பாடினார்கள் - வித்தியாசமாக இருந்தது. தமிழின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது !

திரு அழகியசிங்கர்அசோகமித்திரன்அவரது கதைகள் பற்றியும் தினமும் அவரது புத்தகங்களில் ஏதாவது ஒன்றைப் படிப்பதாகவும் கூறினார். ஆரம்பகாலம் முதல் இன்றுவரைஅசோகமித்திரன் எழுத்துக்களின் அழகும்ஆழமும் மாறவே இல்லை என்றார். புத்தக தினத்தை ஒட்டிகவிதை ஒன்றையும் வாசித்தார். அசோகமித்திரன் அவர்கள் தனக்கு 85 வயது என்றும்இனி எதிர்பார்ப்புகள் ஒன்றும் இல்லை எனவும் குறிப்பிட்டார். அனைத்துப் புத்தகங்களையும் வாசிப்பது இயலாது - ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே முடியலாம் என்றார்! எந்தக் கட்டுபாடுகளுமின்றிசுதந்திரமாக நினைத்தபோது பிடித்தவற்றை வாசிப்பது நல்லது என்றார். இன்றும் எழுதிவரும் இவரது எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை!

திரு (மியுசிக்) கண்ணன்இந்திராபார்த்தசாரதி அவர்களைப் பற்றி குறிப்பிடும்போதுஅவரது நாடகங்கள் - அவுரங்கசீப்ராமானுஜர் போன்றவை - பல மேடைகளில் பிரசித்தம் என்றார். சிறுகதைநாவல்களில் வரும் பாத்திரங்கள் அறிவுஜீவிகளாகதவறுகளும் செய்பவர்களாக இயல்பாக சித்தரிக்கப் பட்டிருக்கும் என்றார்.

இந்திரா பார்த்தசாரதி   பேசும்போதுபுத்தக தினம்ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் பற்றியும் குறிப்பிட்டார். முத்தமிழ் விழாஇயல்இசை,நாடகம் என்பது பிற்கால வழக்கு - சிலப்பதிகாரத்தில்சேர, சோழ, பாண்டிய காலத்தில் நடந்த விழாவைக் குறிப்பதாகக் கூறினார்! முதலில் கதை எழுதியபோதுஅவரது பேராசிரியர்தமிழாசிரியர் இப்படிக் கதைகள் எழுதலாமா எனக்கேட்டாராம் ! நாடகங்கள் எழுதுபவர்கள்அந்தக் காலத்தில் குறைத்துப் பார்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்!

இரு பெரும் எழுத்தாளுமைகள்தன் வயதையும் பொருட்படுத்தாமல்மேடையேறி தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது இதமாயிருந்தது.

ஏதோ தவிர்க்கமுடியாத காரணங்களினால் திரு பிரபஞ்சன் வரவில்லை. ஆனாலும் அவரை அறிமுகப் படுத்தும் விதமாக திருமதி லதா ரகுஅவரது எழுத்துக்கள்விருதுகள் பற்றிய விபரங்களை அழகாககோர்வையாக எடுத்துரைத்தார்கள் !

கோமல் சுவாமிநாதன் அவர்களின் சிறுகதை - மனித உறவுகள் - நாடகமாக்கப் பட்டுஅவரது புதல்வி திருமதி தாரிணி கணேஷ் அவர்கள் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டது! நான்கைந்து காட்சிகளில்அளவான வசனங்களுடன்மிகையில்லா நடிப்புடன் நாடகத்துடன் பார்வையாளர்களை ஒன்றிடச் செய்தது பாராட்டுக்குரியது! கிருபானந்தன்,தாரிணி மற்றும் பங்கு பெற்ற அனைவருமே சிறப்பாக நடித்தார்கள்! பணம்பதவிஅயல்நாட்டு மோகம் இவைகளுக்கு முன் உறவுகள் மறுக்கப் படுவதை கோமல் எழுதியதைஅதே உணர்வுடன் நடித்தார்கள் - தாரிணி மேலும் மேலும் நாடகங்களில் உயர்வார் - வாழ்த்துக்கள் !

இயல்இசை, நாடகம் என குவிகம் இலக்கியவாசல் நடத்திய ஆண்டுவிழா சிறப்பாகவும்வித்தியாசமாகவும் இருந்தது. உலகப் புத்தக நாள் மாலை இலக்கிய வாசத்துடன் இனிமையாகக் கழிந்தது!

குவிகம் இலக்கியவாசல்பாராட்டுக்குரியது!!
-    டாக்டர் பாஸ்கரன்


தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் அலுவலர்களின் ஆர்வம்மிக்க ஒத்துழைப்பு மிகுந்த மன நிறைவை அளித்தது.
குவிகம் இலக்கிய வாசல் பெருமிதம் கலந்த மகிழ்வுடன் தனது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திரு கிருபாநந்தன் நன்றி கூற விழா ஆண்டு விழா இனிது முடிந்தது.
வில்லுப்பாட்டு நிகழ்வு
  











சிறப்புரைகளின் ஒளிவடிவங்கள்::

 அசோகமித்திரன்.



இந்திரா பார்த்தசாரதி








நாடகத்தின் ஒளிவடிவம் :