Wednesday, 24 July 2024

கதை பேசுவோம் -27.04.2024

 27.07.24  கதை பேசுவோம்...

பேசுபவர்கள் :- 

அழகியசிங்கர்

ரேவதி பாலு

பானுமதி ந

விஸ்வநாதன் மீ

ராஜாமணி


மூன்று கதைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அ. இறுதியில் ஒரு பொது கலந்துரையாடலும் (நேரமிருப்பின்) வைத்துக்கொள்ளலாம்

ஆ.  நிகழ்ச்சிக்கு வருபவர்களும் இணையத்தில் பார்க்க விருப்பவர்களும் (நேரமிருப்பின்) வாசித்துவிட்டு வரலாம்.


மறதி                                                    எம் ஜி கன்னியப்பன்

 

1

ராஜேந்தர் சார், அந்தப் பையன் வந்து நிக்கிறான்.. நானே கொடுத்து செட்டில் பண்ணிடுறேன்.. எஸ்டாப்ளிஷ்மெண்ட்ல எல்லாருமா ஷேர் பண்ணிக்கலாம்..' அமுத்தலாக இண்டர்காமில் அசோகன் பேசினார்.

பொறுங்க.. மத்தவங்கக்கிட்டயும் கேட்ருவோம்.. பேங்க்காரெல்லாம் லா பாயிண்ட் பேசுவாரு..'

அசோகனுக்கும் அதுதான் சரியென்று பட்டது.

வீட்டிற்குள் இருந்தபடியே 'தம்பி சாய்ந்தரமா வர்லாமா? கலெக்ட் பண்ணி வெய்க்கிறேன்' என்றார்.

காக்கி நிற பேண்ட் சட்டையும், பாக்கெட்டில் சிவப்பு அட்டையும், கழுத்தில் கருப்புக் கயிற்றில் சிலுவை டாலருமாக நின்ற இளைஞனிடமிருந்து எந்தவொரு பதிலுமில்லை. முன்னரே தொலைபேசியில் விஷயத்தை சொல்லிவிட்டுதான் புறப்பட்டு வந்திருந்தான். நான்கு கிலோமீட்டர் வதக்கு வதக்கென சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்ததெல்லாம், இந்தப் பதிலில்தான் கெண்டை நரம்பில் வலியாகத் தெரிந்தது.

பதிலுக்கு அவன் நின்ற தோரணையிலிருந்த எதிர்க்குரலைப் புரிந்துகொண்டதைப் போல, வீட்டிலிருந்து வெளியே வந்த அசோகன், ‘இல்ல தம்பி.. இது ஃப்ளாட்ஸ்ல எல்லாருமா முடிவு பண்ற விஷயம்.. அதுக்குதான்' என்றார். திருப்தியில்லாதவனாக மெல்ல தலையை அசைத்துவிட்டு அவன் விடை பெற்றான்.

க்ரில் கதவுக்கு பின்னின்றபடி இதைப் பார்த்துக்கொண்டிருந்த வந்து வாங்கிக்கோ அசோகனின் மனைவி, 'சாயங்காலம் நாயேன்னு சொல்லிட்டு, கதவ சாத்திட்டு உள்ள வராம, என்னமோ போயி அவன கொஞ்சிக் கொஞ்சி தாஜா பண்ணிட்டிருக்கீங்க? என்றாள். அசோகன் அலட்டிக்கொள்ளவில்லை.

2

ஊரடங்கு ஆரம்பித்த நாளில் பெரியவருக்கு எல்லாமே புதிதாக இருந்தது. திடீரென திணிக்கப்பட்ட எதார்த்தத்திற்கேற்ப வளைந்துகொடுக்க முடியவில்லை. அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்கலாம் என்ற அரசாணையின் சலுகையையும் மீறி, தொற்று பயத்தால் தெருவின் அத்தனை கடைகளும் பூட்டியே கிடந்தன. சோற்றுக்கு ஊறுகாயோ மிக்சர் பாக்கெட்டோ வாங்கிக்கொள்ளக் கூட அவருக்குக் கடை இருக்கவில்லை. தெருமுக்கத்திலிருக்கும் தள்ளுவண்டி இட்லிக் கடையையும் ரோந்துக்கு வந்த மாநகராட்சி ஆட்கள் மிரட்டி மூடவைத்துவிட்டார்கள். ஒரு வேளை மட்டுமேனும் எப்போதும் அங்கே கை நனைப்பவர்.

குடியிருப்பிலும், கார்கள் வெளியே போய்வருவது குறைந்து போனதால், வாயிலின் இரும்புக்கதவைத் திறந்து மூடும் சோலியும் இல்லை. வாகன ஒலியற்ற சாலையின் வெறுமை, நேரத்தை நீட்டித்துக் காட்டியதில், இனம்புரியாத தனிமையுணர்வு பீடிப்பதைப் போலிருந்தது.

இத்தனை வருடங்களில் அப்படியெல்லாம் இங்கு அவருக்கு பன்னிரெண்டு குடும்பங்களுக்கும் தோன்றியதேயில்லை. தன்னுடைய உறவு என்றோர் அமைதி அவருக்குள் இருந்தி ருக்கிறது. பத்து வருட பந்தம். அவர் இந்தா அந்தா என்று விரட்டி மேய்த்த மூன்றாவது மாடி சேட்டு வீட்டுப் பெண் குழந்தை, வளர்ந்து மணமாகிப் போய்விட்டாள். சுட்டிப் பையன்கள் மீசை வைத்துக்கொண்டுவிட்டார்கள். சைக்கிள் விட பழகிக்கொண்டிருந்த டாக்டர் வீட்டு வாண்டு, தனது ஸ்விஃப்ட்டைத் துடைத்துவைப்பதற்கு வாரத்திற்கு முன்னூறு ரூபாய் கொடுக்குமளவிற்கு பெரிய மனுஷனாகிவிட்டான். வெள்ளைக் கட்டடம் பழுப்பேறிப்போனதால், இரண்டாண்டுகளுக்கு முன்னர் மஞ்சளடிக்கப்பட்டது. ஒரு தசாப்தத்தில் என்னென்னவோ திரிந்து போய்விட்டன. பெரியவருக்கு ஆண்டுக்கொரு முறை ரெண்டு செட் வேஷ்டியும் கை வைத்த பனியனும்தான் மாறிக்கொண்டிருந்தன; ஆள் அப்படியேதான் இருந்தார் அல்லது அப்படித்தான் தெரிந்தார். கிழவனில் என்ன சின்ன கிழவன் பெரிய கிழவன்?

குடியிருப்புக்கென ஒரு நிர்வாகம் உருவாக்கப்பட்டு, அசோகன் அதன் தலைவராகப் பொறுப்பேற்ற காலத்தில், செக்யூரிட்டிக்கென ஏஜென்ஸியை அணுகிய போது, பகலில் ஒருவர், இரவில் ஒருவர் - நடுவயது ஆசாமியொருவரும், பெரியவரும் - மாதம் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று பேசிமுடிக்கப்பட்டது. வசூலிக்கப்படும் பன்னிரெண்டாயிரத்தை ஏஜென்ஸியிடம் கொடுத்துவிடவேண்டும்; கமிஷன் போக அவர்கள் இருவருக்கும். பிரித்துக்கொடுப்பார்கள்.

நடுவயது ஆள், பகலிலேயே தூங்கினார். நடுவயது ஆள், பகலிலேயே தூங்கினார். பெட்டிகடைக்கு அடிக்கடி போய் பீடி இழுத்தார். . இரவுப்பணி நாட்களில், கார்களுக்குக் கதவைத் திறந்துவிட அவரை எழுப்புவதற்குள் காவுதீர்ந்தது. பெரியவர் இதிலெல்லாம் கெட்டிக்காரர். விசாரித்ததில் ஆளும் ஒண்டிக்கட்டை என்று தெரிய, ஏஜென்ஸியிலிருந்து விலகி முழுநேர செக்யூரிட்டியாக சேர்ந்துகொள்ள, ஒன்பதாயிரம்  சம்பளத்திற்கு அவரை அசோகன்தான் சம்மதிக்கவைத்தார். சாக்குத்துணி செக்யூரிட்டி உடுப்பிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. மின்தூக்கிக்கு அருகிலிருக்கும் பெட்டி அறையில் ஒரு பெஞ்சு, டேபிள் ஃபேன், சிறிய அடுப்பு.. ஒன்றொன்றாய் வந்து சேர்ந்தன. பகலில் பக்கத்து குடியிருப்பு காவலாளிகளுடன் அரட்டை மாலையில் கட்டடத்து குழந்தைகளை மேய்ப்பது, இரவில் ரேடியோ- பொழுதைக் கழிக்க ஓர் அட்டவணை வைத்திருந்தார். மாதமொரு முறையும், பண்டிகை நாட்களிலும் பேரப்பிள்ளைகளைப் பார்க்கப்போவதற்காக விடுப்பு எடுத்துக்கொள்வார்.

ஒரு கூட்டத்தின் சௌகர்யத்திலேயே ஒப்பேற்றியதால் மழுங்கிப்போயிருந்த தனிமை, இந்த ஊரடங்கால் மீண்டும் பகிரங்கமாகிவிட்டது.

இரண்டாவது மாடியிலிருக்கும் வாத்தியாரின் அப்பாவும் கீழே வருவதேயில்லை. வாத்தியார் அனுமதித்திருக்கமாட்டாராய் இருக்கும்; தொடைநடுங்கி. அந்த வயதானவரின் மதியப்பொழுதுகள் இதுவரை பெரியவருடன் கதையளப்பதில்தான் கழிந்திருக்கின்றன. பலமுறை வந்து போயிருக்கும் கொரியர்/ஸ்விகி ஆட்களுக்கே இருவரில் யார் காவலாள் என்பது சட்டென விளங்காது. இரண்டுமே ஒடிசலான தேகங்கள். சீருடையும் கிடையாது. சரிக்குச் சமமாக பிளாஸ்டிக் நாற்காலி போட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். செக்யூர்ட்டி பெரியவருக்கு கடைசி இரு வருடங்களில் ருமட்டாய்டு சிக்கல் காரணமாக வலது மூட்டு கொஞ்சம் வெளிப்பக்கமாக வளைவு கண்டு போய்விட்டது - தாங்கிதான் நடக்க வேண்டிய நிர்பந்தம், படிகளில் எளிதில் ஏறியிறங்க முடிவதில்லை. ஒவ்வாமையோ பயமோ; மின்தூக்கியில் ஏறமாட்டார். மாலைகளில் மேல் தளங்களிலிருக்கும் வாசல் விளக்குகளை, வாத்தியாரின் அப்பாவே போட்டுவிட்டுவிடுவார். இப்போது மனிதரை முடக்கிவிட்டதால், நாளுக்கு இருமுறை இவர்தான் நான்கு மாடிகள் படியேற வேண்டியிருக்கிறது.

பக்கத்துக் கட்டட ஏஜன்ஸி செக்யூரிட்டிகள் வேலைக்கு வருவதில்லை - பேச்சுக்குரலைக் கேட்பதே அரிதாகிப்போய்விட்டது. எப்போதாவது மேலேயிருந்து தொலைக்காட்சி கேட்கும். இஸ்திரி வண்டி, காய்க்காரக் கிழவி.. எந்த அரவமுமில்லை. நிலவிய அமைதியில் கை காலெல்லாம் தினவு கண்டதாய் தெரிந்தன. கற்பனை கூட செய்திருந்ததில்லை. உறக்கமும் கூடி வந்து நேரத்தைக் கழிப்பதில் இத்தனை சிக்கல் இருக்குமென்றெல்லாம் தொலைப்பதில்லை. ஒரு திறந்தவெளி சிறையில் கை மல்லாந்து கிடப்பதைப்போல தோன்ற ஆரம்பித்துவிட்டது. எஞ்சியிருக்கும் ஆயுள் வெறும் ஆயுள்தண்டனை என்றளவில்தான் கால்கள் கட்டிப்போடப்பட்டு  நம்பிக்கையும் நாளாகாக அருக ஆரம்பித்தது.

காலையில் சோறு வடித்து மூன்று வேளையும் அதைத் திண்பதைத் தாண்டி எதுவுமே நிகழாத ஆறு நாட்கள். வெறும் ஆறு நாட்கள்தான் ஆகின்றனவா? ரேடியோ செய்திகளில் வேறு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதாகச் சொல்கிறார்கள். யாருமே வேலைக்குப் போவதாக தெரியவில்லை. ‘அட.. வேலைக்கு போகவேணாம்.. வெளிய வந்து காத்தார ஒரு நட நடந்துட்டாவது போவலாம்.. இந்த தீப்பெட்டிக்குள்ளேயே எப்படி அடஞ்சு கெடக்குதுக? செறு புள்ளைகள சத்த நேரம் கூட வெளாட உடாம இப்புடி போட்டு பூட்டி வெச்சு.. கெரகம்..’

நான்காவது மாடியில் இருக்கும் டாக்டர் முதல் வாரம் முடிந்ததும் பணிக்குப் புறப்பட்டார். பழைய மிடுக்கு உடைகள் இல்லை. சாதாரண அரைக்கை சட்டை, ஜீன்ஸ் பேண்ட், செருப்பு சகிதம் காரை எடுத்தவரிடம், "ஆஸ்பத்திரி போலீங்களா?”, பெரியவர் கேட்டார்.

"அங்கதான் போறேன்.. ஒரு வாரம் விட்டு ஒரு வாரந்தான் வேல இப்போ.."

"எத்தினி நாளிக்குங்க இதோட கெடந்து மல்லுக்கட்றது?” "ஒன்னு ஒன்ர மாசம் ஆயிடும் எப்டியும்.. அதுவரைக்கும் இப்படிதான்.. வெளிய எங்கிட்டும் போய்ட்டு இருக்காதீங்க.."

"போறதுக்கு என்ன கடையா கெடக்கு வெளிய? பூரா அடச்சு போட்டானுங்க.. காத்துலேயேவா கிருமி இருக்கப்போவுது.. இப்படி மொடங்கியே கெடந்தா தப்பிச்சுக்க முடியுமா? அடிச்சுதுன்னா போக வேண்டிதான்.. பொழப்ப பாக்காம கதவ பூட்டிக்கிட்டே கெடக்குதுக..”

டாக்டர் சிரித்துக்கொண்டார். அடுத்தடுத்த நாட்களில் அவரும் பச்சை நீலம் என அறுவை அரங்க உடுப்பிலேயே புறப்பட்டுப் போவது பெரியவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ இந்த ஒரு வண்டியாச்சும் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கே.. பெரியவர் எப்போதும்போல, கதவைத் திறந்துவிட்டு கடந்துபோன காரின் முதுகுக்கு சலாம் வைத்துக்கொண்டிருந்தார்.

பன்னிரெண்டாவது நாள் தெருமுக்கத்திலிருக்கும் பாண்டியின்  பலசரக்கு கடை திறக்கப்பட்டது. கடையையொட்டி கொஞ்சம் சனநடமாட்டம் கண்ணில் பட ஆரம்பித்ததும் பெரியவருக்கு ஆட்கள் நிற்பதற்கு பாண்டி வட்டம் வரைந்துவைத்திருந்தான். பெரியவருக்கு சிரிப்பு கொள்ளவில்லை.

"இந்த ரெண்டு வட்டத்துக்கு நடுவாப்ல கிருமியால பறக்க முடியாதாரா பாண்டி?”

இந்த நக்கல் மசுருக்கு ஒன்னயதான்யா மொதல்ல கொண்டுபோக போவுது?"

"பயத்துலயேதாண்டா அதிகம் பேரு சாவப் போறான்.. பாத்துக்கிட்டே இரு."

அங்கு நின்ற மூன்றாவது ஆள் சொன்னார், "மருந்தெல்லாம் கண்டுப்புடிச்சுட்டான் சைனால.. அவஞ் சொல்ற ரேட்டு கொடுத்து வாங்க இவனுக யோசிக்கிறானுங்க..”

பாண்டி சிரித்துக்கெ ா ண் டே பொட்டலம்  போட்டுக்கொண்டிருந்தான். ஒரு சிறிய பையில் ஐந்து கிலோ அரிசியை வாங்கிக்கொண்டவர், வந்து குடியிருப்பின் கதவைத் தள்ளிய போது, வாத்தியாரின் மனைவி மதிலையொட்டி நின்றுக்கொண்டிருந்தாள். நைட்டியின் குறுக்கே நூல் துண்டுடன், குளிப்பதற்கு தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு, நெற்றியில் பொட்டில்லாமல் அப்படியவள் நிற்பது பெரியவருக்கு அமங்களமாகப் பட்டது.

"என்னம்மா?”

"கட வரைக்கும் போயிட்டு வறீங்களா? பாண்டி கட தெறந்துருக்கறதா போனடிச்சு சொன்னான்.."

"அங்கதாம்மா போயிட்டு வரேன் இப்ப.. தெறந்துட்டான்”

“தெரிஞ்சா முன்னாடியே சொல்லியனுப்பிருப்பேனே..” வருத்தப்பட முயற்சித்தாள்.

"அட அதுக்கென்னம்மா.. ரெண்டு தப்படி.. ஓடிப் போயிட்டு ஓடியாந்துருவேன்.." என்றவர் அவளது துண்டுச்சீட்டை வாங்கிக்கொண்டு, தாங்கித் தாங்கி கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பின்னான உற்சாகம் அந்தத் தாங்கலை, ஏதோ எம்பிப் பறக்க அவர் எத்தனிப்பதைப் போல காட்டியது.

3

ஊரடங்கு நீட்டிக்கப்படப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டிருந்தது. நடுவில் விளக்கு வைக்கவும் பட்டாக கொளுத்தவும் எல்லோரும் வெளியே வந்த நாளில், வீதியே பிரகாசமாக ஜொலித்தது. பெரியவருக்கு அந்நாட்களில் அந்த இரவுதான் அத்தனை ஆசுவாசமாக இருந்தது. அடுத்த காலையே மீண்டும் ஓட்டிற்குள் சுருண்டுகொள்வார்கள் என்று அவர் எதிர் பார்த்திருக்கவில்லை.

பாண்டி கடையைத் தவிர, இன்னொன்றும் அத்தெருவில் இறக்கப்பட்டது. அதில் கடைக்காரரே சொந்தமாக தைத்த முகக்கவசமெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை பெரியவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த காடா துணி காப்பாத்திப்புடுமா மனுசாள?”, சுரண்டிப் பார்த்தப்படி விசாரித்தார்.

"மோடியே மூஞ்சில துண்ட போத்திக்கிட்டுதான் பேசுறாப்டி... மூக்க மறச்சுக்கிட்டா போதும்ண்ணே.." கடைக்காரர் தமாஷாக சொன்னார்.

"எங்க கட்டடத்து டாக்டர கவனிச்சியா? மண்டைக்கொரு உடுப்பு, மூஞ்சிக்கொரு உடுப்பு, செருப்புக்கு மேல ஒரு உடுப்பு.." "பாத்தன் பாத்தன்.. தள்ளியே இருங்க அவரு கிட்டல்லாம்.."

காசுக்காண்டிதான ஓடுறான் மனுசன்.. பாவம்.."

எனக்கு மட்டும் கடைய தெறந்துவைக்கணும்னு விதியா? காசுக்குதான்..'

பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டரின் கார் குடியிருப்புக்குள் நுழைவது தெரிந்தது. அவர் வருகிற நேரம் என்பதால் கதவைத் திறந்து வைத்துவிட்டுதான் பெரியவர் கடைப் பக்கம் வந்திருந்தார். பெரியவர் அங்கு போவதற்குள் காரை நிறுத்திவிட்டு அவர் மேலே ஏறிவிட்டார். போனதும் நேராக குப்பைத்தொட்டியைத்தான் பார்த்தார். தினமும் அந்த மருத்துவர் உள்ளே வந்ததும், கையுறைகள், முகக்கவசம், தொப்பி மூன்றையும் கழற்றி அந்தக் குப்பைத்தொட்டிக்குள் போடுவதைப் பெரியவர் கவனித்திருக்கிறார். அதிலிருந்த முகக்கவசத்தைக் கையிலெடுத்துப் பார்த்தார்: கடையில் பார்த்த துணி மாதிரி இல்லை. இவ்வளவு மொந்தையா இருக்கு.. இது வழியா எப்புடி மூச்சுவுடுறது.. முகத்தில் வைத்து ஒரு முறை மூச்சையிழுத்துப் பார்த்தார். ரொம்ப சிரமமாக தெரியவில்லை. வெள்ளக்கார சரக்கு.. ரூவா கூடதான் இருக்கும்.. தொட்டியிலேயே வீசிவிட்டு, நாற்காலியை எடுத்து வாயிலருகில்

போட்டு அமர்ந்தார். தெருவில் எல்லோரும் கவசம் அணிந்து செல்கிறார்கள். பச்சை, மஞ்சள், துணிக் கவசம், கம்பளிக் கவசம். இதென்ன ஜட்டி மாதிரி இருக்கு.. ஒருத்தி ஒரு கையால் மூக்கை ப்பொத்திக்கொண்டு மறு கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனாள்.. நன்றாகவே பொழுது கழிந்தது.

அடுத்த நாள் காலை, கார் எடுக்க வந்த டாக்டரிடம் விசாரித்தார், “இந்க்த கவசமெல்லாம் என்ன வெலங்க இருக்கும்..” "இதுவா.. ஏன் உங்களுக்கு எதும் வேணுமா? கொண்டுவந்து தர்றேன்..” சொல்லிவிட்டுக் கிளம்பிப்போனார்.

அதற்குப் பின்னான நாட்களில் அப்படியெதுவும் அவர் தரவில்லை என்று தோன்றும்போதெல்லாம் ‘மறந்திருப்பாரு' என்று பெரியவரே சொல்லிக்கொள்வார்.

4

வாத்தியார் மனைவிக்காக கடைக்குப் போய் வருவது, பெரியவருக்கொரு நிர்ணயிக்கப்படாத பணி என்றாகிவிட்டது. ஒரு முறைக்கோ இரு முறைகளுக்கு சேர்த்தோ அவளும் ஐந்து பத்து என காசைத் திணிக்க ஆரம்பித்தாள். வங்கி மேலாளரின் மனைவியும் அதேப்போலதான். பெரியவரும் அந்த வாடிக்கைக்கு பழகிவிட்டார் - குப்பைகொட்ட கீழிறங்கி வருபவர்களிடமெல்லாம், 'கடைக்கு எதுவும் போவணுமாம்மா?' என்று கேட்குமளவிற்கு. அசோகனின் மனைவி வேலை ஏவிவிட்டு காசு தரமாட்டாள் என்பதையெல்லாம் இவர் பொருட்படுத்தவேயில்லை. அடைந்துகிடக்க முடியவில்லை; ஏதாவது தன்னைச் செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

அந்தப் பண்ட பரிவர்த்தனையின் இயங்குமுறையே ஒரு மாதிரி சிடுக்கானது. பையையும் காசையும் கையில் கொடுத்துவிட்டுக் காத்திருக்காமல் மேலே போய்விடுவார்கள். இவர் கடைக்குப் போய் வந்ததும், சாமான்களை மின்தூக்கிக்குள் வைத்து மேலே அனுப்பிவிட்டு இன்டர்காமில் அழைத்து சொல்லுவார். மேலே அவர்கள் அந்தப் பையைக் குச்சியை வைத்து எடுக்கிறார்கள்: வெயிலில் கொண்டுபோய் வைக்கிறார்கள்: பையின் கைப்பிடிகளைக் கிருமிநாசினி கொண்டு துடைக்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரிந்ததேயில்லை. தெரிந்தாலும் கேலிதான் செய்திருப்பார்.

மூன்றாவது மாடியில் இருக்கும் சங்கரன், ஸ்விகி ஆட்களை மேலே அனுப்பவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இவரையே

வாங்கி வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரங்கழித்து பெற்றுக்கொள்வார். “சாப்பாட்ட சூடா சாப்புடாம நெதைக்கும் ஆறிப்போயி ஆறிப்போயி..”, பெரியவர் புலம்பிக்கொண்டே கொடுக்கும்போது சங்கரன் பதிலெதுவும் சொல்லிக்கொள்ளாமல் வாங்கிக்கொண்டு விறுவிறுவென

மேலே போய்விடுவார். 'அந்தம்மாளும் வந்திருந்து வாழமாட்டேங்குது.. கடையிலயே வாங்கி தின்னுக்கிட்டு கெடக்கான் மனுசன்..' என்று பெரியவர் விசனப்படுவார்.

நாளாகாக நடை அதிகமாவதால் மூட்டு வலி அதிகமாகத் துவங்கியது. முன்னரே இது குறித்து டாக்டரிடம் கேட்டதற்கு, “இது ஒரு மாதிரி புலிவால் புடிச்ச வியாதிதான்.. ஆயுசுக்கும் மாத்தர திங்கணும்” என்று சொல்லியிருந்தார். அவர் கொடுத்த மருந்துகளை எடுத்துப்பார்த்தும், பெரிதாகவொன்றும் சுகப்படவில்லை என்பதால் மேற்கொண்டு இவரும் நாட்டம் காட்டவில்லை. இப்போது வலி விண்ணெ விண்ணென்று வெடிக்க ஆரம்பிக்கிறது. கடைசி இரண்டு நாட்களாக பாண்டி கடை வரை கூட நடக்க முடியவில்லை. நடுவில் மாத்திரை போடாமல் விட்டுவிட்டு, இப்போது போய் காட்டினால் ஏச்சு வாங்கித் தொலைய வேண்டும். இரண்டு நாட்கள் மேலுக்கு முடியவில்லையென அறைக்குள்ளேயே படுத்துக்கொண்டார் மூட்டு கொஞ்சம் தணிந்து கொடுப்பதைப் போல தெரிந்தது.

மூன்றாம் நாள் மீண்டும் வாத்தியாரின் மனைவி பட்டியலுடன் வந்துவிட்டாள். இவருக்கும் சற்று வெளியே போய்விட்டு வந்தால் தேவலாம் என்றிருந்ததால், பையை வாங்கிக்கொண்டு முன்பைவிட கூடுதலாகத் தாங்கி, பாண்டி கடையின் பக்கம் போனார். கடையில் கூட்டம் வரிசை கட்டியிருந்தது. கோலமாவு வட்டங்களெல்லாம் காணாமல் போயிருந்தன. குறைந்தபட்சம் எல்லோரும் கைக்குட்டையையாவது முகத்தில் கட்டிக்கொண்டிருந்தார்கள். "பாண்டி.. அந்த ஸ்டூல கொடு.. செத்த இப்டி குந்துறேன்.." கூட்டம் கலைவதாக இல்லை. பட்டியலை பாண்டியிடம் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். மாநகராட்சி ரோந்து வாகனம் விழிப்புணர்வு வாசகங்களை ஒலி பெருக்கியில் முழங்கியபடி கடந்து போனது. வண்டி

சாலைமுனையில் திரும்பும்வரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

"பொழப்பில்லாம கூவிட்டே இருக்கான் வாரக்கணக்கா.. ஒரு நாயும் மதிச்சபாடில்ல.."

வரிசையில் நின்ற ஒருவர் முறைப்பதாகத் தெரிந்தது. இவர் ஒரு பக்கமாக திருப்பி சிரித்தார். மேற்கொண்டு அவருடைய முகத்தையே பார்க்கவில்லை.

பாண்டி இரண்டு பை நிறைய சாமான்களைப் போட்டு      வந்து அவரிடம் நீட்டி, "வந்தா வாய் சும்மா இருக்காதாய்யா ஒனக்கு.. மாஸ்க்கு போடாம ஒக்காந்ததும் இல்லாம் வம்பு பேசி அந்தாளு திட்டிட்டுப் போறான்."

தலையை       பிரித்தபடியே பைகளைப் பற்றிக்கொண்டவர், “மனசு சுத்தமா இருக்கவனுக்கு எதுக்குடா மாஸ்க்கு.. மகரு.." நடக்க ஆரம்பித்தார். "தெருவுல இதுக்கு மொத சாவு நீயாதான் இருக்கப்போற பாரு " பாண்டி பின்னாலிருந்து கத்துவது காதில் கேட்டது. பக்கவாட்டில் ஒரு முறை காறித் துப்பிவிட்டு சிரித்துக்கொண்டே நடையைத் தொடர்ந்தார். அதுதான் அவர் கடைக்குப்போய்வந்த கடைசி முறை.

5

மூட்டுவலி ஒரு காலோடு ஓயவில்லை; மறு மூட்டும் தெறிக்க ஆரம்பித்தது. இடுப்பெலும்பைக் கவ்விப் பிடித்தது. கீழ் தண்டிலிருந்து கழுத்துவரை ஒரு பாறைக்கம்பியை உள்ளே செருகியதைப் போல, உடம்பை முறுக்கினால் உயிரே போவதுபோலிருந்தது. புரண்டு கூட படுக்கமுடியவில்லை. ஒரு நாளுக்குள்ளாக ஒட்டுமொத்த உடலையும் இறுக்கிப் பிழிந்தது வலி.

அசோகனின் மனைவி இரண்டு முறை கடைக்கு போவதற்காக கேட்கவந்து, இவர் சுருண்டு கிடப்பதைப் பார்த்து தயங்கிவிட்டுப் போனாள். அசோகன் ஒருமுறை கீழே வந்து பெரியவரை எழுப்பாமல், மோட்டார் ரூம் சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு போய் தண்ணிமோட்டாரை போட்டுவிட்டு மேலே ஏறிவிட்டார். மதியமொரு முறை ஜெனரேட்டரைப் போடுவதற்காக வந்த போதும் அவர் பெரியவரைத் தொந்தரவு செய்யவில்லை. சாயுங்காலத்தில் டாக்டரின் கார் கதவில் நின்றபடி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவிதான் கீழே வந்து திறந்துவிட்டாள்.

"செக்யூரிட்டிண்ணா.. ண்ணா.. என்னாச்சு.."

படுத்தவாக்கிலேயே தலையைத் திருப்பிப் பார்த்தார். "ஒடம்பு நோவு சார்.. எப்பயும் இல்லாம.. கொன்னெடுக்குது..” டாக்டர் கொஞ்சம் தயங்கி..

காய்ச்சல் இருக்குதா?”

"காச்சல்லாம் இல்ல.. வலிதான்.."

"... மாத்தர வீட்ல வெச்சுருக்கேன்.. கொண்டு வரேன் இருங்க.." மாத்திரைக்கெல்லாம் ஒன்றுமே கேட்கவில்லை. வலியே மூச்சை நிறுத்திவிடும் போலிருந்தது: நின்றுவிட்டால் தேவலாம் என்றுதான் நினைத்தார். நடுராத்திரிக்கெல்லாம் முனகல் அதிகமானது

நா வறண்டு கசந்தது. எழுந்து ஒரு குவளை  தண்ணீரை விழுங்கமுடியவில்லை. வலி பெருவலி

அடுத்த நாள் கடைக்குப் போயிருந்த வாத்தியாரின் மனைவி சொல்லித்தான் பாண்டிக்கு விஷயம் தெரிந்தது. கடையில் ஒரு பையனை நிறுத்திவிட்டு. அவன் இங்கு வந்தபோது அசோகனும் ராஜேந்திரனும் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். பாண்டி வந்து விசாரித்ததில் பெரியவரின் மகனுக்குத் தகவல் சொல்லிவிடப்பட்டிருப்பதாகவும், மதியம் வந்து அவன் அழைத்துப்போவான் என்பதும் தெரிந்தது.

*ஜொரம் எதும் இருக்கா சார்?"

பாண்டி அந்தக் கேள்வியை அழுத்தமாகத்தாள் கேட்டிருந்தான். யாரும் பதில் சொல்லவில்லை. பாண்டி அறைக்குள் போகப் போனபோது அசோகன் தடுத்தார்.

"நீங்க மேல போங்க சார்.. நா பாத்துக்குறேன் ", தோளில் கிடந்த துண்டையெடுத்து மூக்கைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

"பெரியவரே.. சாப்ட்டியா எதுவும்.."

தலையை இடவலமாக வலுவில்லாமல் ஆட்டிவிட்டு நாக்கை ஒரு முறை நீட்டிக் காட்டினார்,

`கசக்குதா..?” நெற்றியில் கை வைத்தான் - லேசான சூடு.

அசோகன் சற்றுத் தள்ளி பின்னால் நின்று, “காய்ச்சல் இருக்கா என்ன?” என்றார்.

இவரு பையன ஜிஎச்சுக்கு வரச் சொல்லிருங்க சார்.. நா வர பெட்ல சேக்குறேன்.."

அன்று மாலை அந்த டாக்டர் கொண்டு வந்த ஏதோவொரு திரவத்தில் துணியொன்றை முக்கியெடுத்து உருட்டி, அந்தக் காலி அறைக்குள் வீசி, கதவிற்குப் பூட்டு போட்டார்கள்.

பெரியாஸ்பத்திரியில் சேர்த்த அடுத்த நாள் காலை பெரியவர் செத்துப்போய்விட்டார் என்பதும். அதற்கு முன்னர் அவருக்கு மூச்சுத் திணறல் இருந்ததென்றும், நோய்த்தொற்றுக்கான டெஸ்ட் எதுவும் எடுக்கப்படவில்லையென்றும், கடைசியாக இறப்பு சான்றிதழில் ஆஸ்துமா என்று குறிப்பிடப்பட்டிருந்ததென்றும் பாண்டி சொல்லித்தான் குடியிருப்புவாசிகளுக்குத் தெரியவந்தது. பாண்டிக் கடையிலிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஒரு மாதத்திற்கு அவர்கள் யாருக்கும்  எதுவுமே தேவையாய் இருக்கவில்லை.

பன்னிரெண்டாம் தேதி இறந்துபோன பெரியவருக்கான முழு மாதச் சம்பளத்தை மூன்று நான்கு முறை அலையவிட்ட பின்னர் அவரது மகனிடம் கொடுத்தனுப்பினார்கள். அடுத்த செக்யூரிட்டிக்காக ஏஜன்ஸியில் சொல்லிவைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பூட்டிய அறை பூட்டியபடியே கிடந்தது.

வாயிற்கதவைத் தாங்களே திறந்து மூடிக்கொள்ள குடியிருப்புவாசிகள் பழகிவிட்டார்கள்.

கடையில் தொற்றுக்காலத்திற்கு முன்பை விட கூட்டம் இப்போது அதிகம் நிற்பதாகத் தெரிந்தது. தள்ளுவண்டிக் கடையின் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், தாடையில் முகக்கவசத்தை இழுத்துவிட்டுக்கொண்டு போலீஸ்காரர்கள் இட்லி தட்டுடன் நிற்க ஆரம்பித்தார்கள். இஸ்திரி வண்டியின் மணியோசை மீண்டும் வாடிக்கையானது.

ஒரு நற்காலையில், புதிய செக்யூரிட்டியை ஏஜன்ஸியிலிருந்து அனுப்பிவைத்தார்கள். அசோகன், வந்தவரிடம் நெறிமுறைகளை விளக்கிக் கூறிவிட்டு, பூட்டியிருந்த அந்த அறையை விருப்பப்பட்டால் சுத்தப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். உடன்நின்ற வங்கி மேலாளரும், ராஜேந்திரனும் எப்போதும் முகக்கவசம் அணியவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். வாசல் விளக்கு போடவெல்லாம் மாடிக்கு வரவேண்டியதில்லை என்பதை வாத்தியார் சேர்த்தார்.

அத்தனையையும் கேட்டுக்கொண்ட அந்தப் புது ஆள் படியிறங்கும்போது ஏதோ யோசித்தவாறு, மேலே நின்ற அவர்களைப் பார்த்துக் கேட்டார்,

"முன்னாடி யாரு சார் இருந்தது.. நம்ம ஏஜென்ஸி ஆளா?”

 "இல்லல்ல.. பெரியவர் ஒருத்தரு இருந்தாரு.. அவரு பேரு.. ராஜேந்தர் சார்.. அவரு பேரென்ன..?”

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அந்தப் பெயர் யாருக்குமே நினைவிலில்லை. 

####



2.     கரகம் ...                       எம் எம் தீன்

 

செட்டுக்காரன் காலை நாலு மணிக்கே கதவைத் தட்டுவான் என்று ஈரோஜா எதிர்பார்க்கவில்லை. இன்னும் டீக்கடையில் பாட்டுகூடப் போடவில்லை. அவள் முந்தா நாள் விடிய விடிய ஆடிவிட்டு,   நேற்று பகலிலும் ஆடிய அசதிகூட இன்னும் தீரவில்லை. மெதுவாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். கண்தெரியாத அம்மா கட்டிலில். அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

கண்ணைக் கசக்கிக்கொண்டே கதவைத் திறந்தாள். யாரும் நிற்பது தெரியவில்லை. அந்த அதிகாலையில் வீட்டின்முன் நின்ற பன்னீர்மரம் எப்போதும் போவில்லாமல் அதிக காரநெடியோடு மணத்தது- நாசியைத் தேய்த்துக்கொண்டே மீண்டும் பார்த்தாள்.,

மரத்தின் நிழலுக்குன் இனோவா கார் நின்றுகொண்டிருந்தது. மேளக்காரர் மணிகண்டனும் பபூன் ராஜாமணியும் காருக்குள் இருப்பது தெரிந்தது

வாணி மூன்றாவது அழைப்பில் எடுத்து, "மம்" என்று சொல்லிக்கொண்டே அசதி முறித்தாள்..

"செட்டுண்ணே, வாணி எந்திரிச்சிட்டா, முதல்ல அவளைக் கூட்டிக்கிட்டு வாங்க போற வழில டீ குடிச்சிக்கிடலாம்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வாங்க”   விரட்டினான்

வாணி சின்னப் பொண்ணு, முக்கும் முழியுமா இருப்பவள். வேலைக்குப் போகாத குடிகாரக் கணவனை நம்பிக் குடும்பம் நடத்த முடியாமல் ஆடவந்தவள். தலையில் கும்பத்தைத் தூக்கி வைத்துவிட்டால், அரை மணி என்ன, ஒருமணி நேரமானாலும் சனைக்காமல் சுழலுவாள். தலையில் இருந்த  கரகம் இடது தோளில் இறங்கி முதுகு வழியாக வலது தோளுக்கு வந்து  தலையேறும். ஊரே வாயைப் பிளத்துகொண்டு பார்க்கும்  இப்போதெல்லாம் வாணியைத்தான் தனக்கான துணைக்கும்பமாக அழைத்துப் போகிறாள். அழகுக்கு அழகு ஆட்டதுக்கு ஆட்டம் என்று இருக்கிற வாணியை ஆட்டத்துக்கும் கூட்டிப் போவதைவிட, பத்திரமாக விடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்நிற கவலைதான் சரோஜாவுக்குப் பெரிதாக இருக்கும் வாலிபப்பையன்களைவிட பெருசுகளின் தீக்கண்கள் கொடுமையானவை.

திருமதி செல்லி என்ற பெரிய நாச்சியார் நேற்று இரவு இறந்துபோனதையும் நாளைக்கு மாலை அடக்கம் என்பதையும் பெரிய பேனர்கள் சொல்லின அம்மாவின் பலதரப்பட்ட புகைப்படங்கள் பெரிதாக அச்சிடப்பட்டு இருந்தன வழியெங்கும் பெரிய கட்அவுட்கள் ஊரையே மறைத்தபடி நிறுத்தப்பட்டிருந்தன

அந்த பங்களா வீட்டின் முன்முகட்பு அறையில் செல்லி என்ற பெரிய நாச்சியார் சடலம் மயில் டாலர் வைத்த நாலு வடச்சங்கிலி, அட்டியல் பதக்கம். தோடு சும்மல்கள், ஏழுகல் பேசரி மூக்குத்திகளோடு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. மேலெழும்பிய வயிற்றை புதுக் காஞ்சிபுரப் பட்டின் மூலம் மறைக்க முந்தியைம் பிராச மடித்துப் போட்டிருந்தார்கள்,

காரை விட்டு இறங்கியவுடன் கொடுத்த தேநீரைக் குடித்ததும் இழவு வீட்டுக்காரர் ஓடிவந்து பின்புறமிருக்கும் வீட்டைக் காட்டி "இதில் உடை மாற்றிக்கொள்ளுங்கள்'" என்று சொல்லிவிட்டுப் போனார்.

பொதுவாக சாவு வீட்டுக்குப் போனால்,  சொந்த பந்தங்கள் வரும்வரை பந்தலில் நின்று ஆடிவிட்டு, சாவுசீர் வரும்போது ஊர் எல்லையில் நின்று அழைத்து வந்துவிட்டு, பிள்பு பிணம் தூக்கிப் போகிறபோது ஒரு குறிப்பிட்ட முக்கு வரை ஆடிச் சென்றுவிட்டு முடித்துக் கொள்வார்கள். இது வசதியான மூத்த அம்மாவின் கல்யாண சாவு என்பதால் கூட கொஞ்சநேரம் ஆகும் என்று எண்ணிக்கொண்டாள்.

மேக்கப் போடுவதற்காக பழைய ஓட்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். இறந்த  செல்வி அம்மான் பிறந்த வீடு என்றார்கள் வீட்டில் யாரும் இருப்பதற்கான எந்த அடையாளமும் தென்படயில்லை. கொஞ்சம் மகிழ்ச்சியுடன் மேக்கப் எடுத்துப் பரத்தினார்கள். ஈரோஜா பவுடர்ப்பூவை எடுத்து முகம், கழுத்து, கழுத்தின் பின்புறம், மார்பின் மேல் பகுதி எல்லாவற்றையும் துடைத்துவிட்டு துடைத்த பூவைப் பார்த்தாள். எத்த அழுக்கும் இல்லை. சரோஜாவுக்குப் பின்னால் பாவாடையும் சட்டையுமாக சிறுமி ஒருத்தி ஒளித்து நின்று மேக்கப் சாமான்களையும் மேக்கப் போடுவதையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “எங்கூட்டுலே ஆட்டக்காரங்க இருக்காங்க" என்று சொல்லிக்கொண்டே ஓடிப் போனாள்.

 வாணியும் முகம் துடைத்துவிட்டு மேக்கப் சாமாள்களை எடுத்து வைத்தாள். சரோஜா அப்படியே முத்து மஞ்சளை எடுத்து பானோடு சேர்த்துக் கலந்து தடவினாள், கொஞ்ச நேரம். காயட்டும் என்று இருந்தாள். சரோஜாவுக்கு மேக்கப் போட் ஆரம்பித்தவுடன் அம்மா ஞாபகம் வந்துவிடும். 'நாம் அழகுதான் என்ற எண்ணத்தோடு ஒப்பனையை ஆரம்பித்தால் ஒப்பனைக்குத் தக்க முகம் மலர்ந்துவிடும்' என்று அவள் அம்மா கலைமாமணி பொன்னம்மா சொல்வாள். அது உண்மைதான் என்பதை மேக்கப் போடும்போது சரோஜா எப்போதும் உணர்வாள், தானும் அழகுதான் என்று மனம் துளிர்க்க ஆம்பித்துவிடும்.

வாணியும் நல்ல திறம், களையான முகம். பெரும்பசி அவள் வீட்டில் பேய் போல ஆடிக் கொண்டிருந்தது. மூன்று பிள்னைகளை வைத்துக்கொண்டு அல்லாடிய அவள், தன் கணவன் குடித்துக் குடித்து உடல் இற்றுப்போன நிலையில் வயிற்றுப்பசி தீர்க்க ஆடவந்தாள்.

சரோஜா போட்ட பான் கலவை சந்தனநிறத்தில் மஞ்சள் முகமூடி போட்டது போல இந்த ரோஸ்டவுடர் போடக் கையில் எடுத்தாள். வாணியும் கொஞ்சம் பானை எடுத்துத் தேய்த்தபடி இருந்தாள். யாரோ ஓடிவருவது போக இருந்தது. மெதுவாகக் கண்ணைத் திறந்து யார் என்று பார்த்தாள். ஒரு பெண் ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த மகளுடன் உள்ளே வந்து கோபமான முகத்துடன் பேச ஆரம்பித்தாள். "யாரு நீங்க, ஆட்டக்காரித்தானே. உங்கள யாரு இந்த வீட்டுக்கு வர. சொன்னது. ஊருக்கு எளைச்சவள் புள்ளையார் கோயில் ஆண்டிங்கிற கதையா  இருக்கு. இந்தா பாருங்க, நாங்க என்ன சாதி என்னா சனம்னு பார்க்கதில்லே ஆனா ஊர்க்காரங்க ஒண்ணில்லாட்டா ஒண்ணு சொல்வாங்க நீங்க வேற எடத்துக்குப் போங்க" என்றவள், வாய்களுள் இழவு வீட்டுக்காரன் பணப்பெருமையைக் கேவலமாகத் திட்டினாள்.

சரோஜா என்னவென்று அறியாமல் ஏறிட்டுப் பார்த்தாள். அவ்வளவுதான் அந்தப் பெண்ணுக்குக் கோபம் பெர்த்துக்கொண்டது .”என்னடி ஏறிட்டுப் பாக்க. போன்னா போக வேண்டியதுதானே. ஆட்டக்காரிக வீட்டுக்கு வந்தா வீடு உருப்பட்ட மாதிரிதான். போங்கள். வெளியே"

சரோஜாவும் வாணியும் விக்கித்துப் போய் மேக்கப் சாமான்களை எடுத்துப் பெட்டியில் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள்.செட்டுக்காரனைப் பார்த்து சரோஜா கோபத்துடன் கத்தினாள்.

"செட்டுக்காரரே, கொஞ்சமாவது அறிவிருக்காயா உமககு. எங்க போனாலும் இதுதானே கதையா இருக்கு. எப்பவும் நாம வர ஆம்னி வேன்ல வந்தா, அதுக்குன்னேயே இருந்து மேக்கப் போட்டிருப்போம்ல ஆட்டக்காரின்னா என்னமோ கீழ்த்தரமானவ, கேவலமானவள்னு நெனப்பு இருக்கு சும்மா பெரிய கார்ல ஏறிட்டு  ஜம்முன்னு வந்ததுக்கு நாங்க கேவலப்படறுமாக்கும்" என்று திட்டினாள்,

பாதி கேட்டும் கேட்காமலும் ஓடிப்போன செட்டுக்காரன் முத்து எங்கேயோ அங்குமிங்குமாய் ஓடி கேட்க, ஒதுக்குப்புறமா மாடு கட்டும் எருதுப்பிறையைக் கைகாட்டினார்கள். எந்த மறைப்பும் இல்லாத இடம் வேறு வழியின்றி மேக்கப் போட்டுவிட்டு, கொண்டு வந்த சேலையை மறைப்பாகக் கட்டி உடை மாற்றிவிட்டு மார்பு மறைவுத்துணியைப் போட்டுக்கொண்டு வெனியே வந்தார்கள்,

அடுத்த எருதுப்பிறையில் சாராயத்தைக் கேனில் வைத்து போகிற வருகிற எய்லோருக்கும் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஜிகினாவும் தங்கநிற லேசுகளும் வைத்துத் தைக்கப்பட்ட மயில்கழுத்து நிறத்தில் உடையை உடுத்தியிருந்தார்கள். குட்டை யான அந்தச் சின்னப்பாவாடை  முழு தொடைகளையும் காட்டியது வெளியூர் சுரகசெட்டுகள் குட்டைப் பாவாடையை குறைத்துக் குறைத்து தொடை தெரியும் அளவிற்கு ஏற்றிவிட்டார்கள்

முருகம்மாள் இறந்துபோன பெண்ணின் குடும்பப் பெருமைகளைப் பாடிக்கொண்டு இருந்தாள்,

சாவு வீட்டில் கரகம் வைத்துக்கொண்டு ஆடுபவளைச் சுற்ற விடுவார்கள் சுற்றிலும் நின்று கொண்டு "சுத்து.. சுத்து”:  என்று சுத்தலும் விசிலும் கேட்டுக்கொண்டே இருக்கும் கொஞ்சம் சடையோடு நின்றாலும் விடமாட்டார்கள் கிறுகிறுவென்று தலைசுற்ற ஆரம்பித்த பின்னும் விடமாட்டார்கள். அப்படியே தலை, கால், கையெல்லாம் விறுவிறுவென்று பத்து   நிமிஷத்துக்கு உலகமே இருண்டுபோகும் வெட்டப்போகிற கிடாயைப் போல ஆகிவிடும் அந்த தேரத்தில் இழவு வீட்டுச் சோகம். அழுகை காணாமல் போய்விடும்.

மார்பு மறைப்புத் துணியை எப்போது எடுத்து ஆட ஆரம்பிப்பார்கள் என்று இளவட்டங்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தன. இன்னும் கொட்டுக்காரர்கள் ரெடியாகவில்லை.

தவிலையும் உருமியையும் தட்டிப் பார்க்க ஆரம்பித்த பின்னே, நாதஸ்ரக்காரர் சீவாளிக்குள் குச்சியைத் திணித்து ஊதிப் பார்த்தார் எல்லாம் ரெடியானவுடன் மார்புத்துணியை நீக்கிவிட்டு ஆடத் தயாரானார்கள் மார்பைத் தூக்கிக் காட்டும் விதத்தில் சுருள்சுருளாக கற்கள் வைத்தும் அதைச் சுற்றிலும் பட்டையாக லேஸ் வைத்தும் தைத்திருந்தது மார்புகளை எடுப்பாகக் காட்டியது. சரோஜாவின் இறுகிய ஜாக்கெட்டுக்குக் தீழே லேசான தொப்பையில் நிலா போல தொப்புள் தெரிந்தது.

வாணியின் சிறுவயிற்றில் கரும்பொட்டு போல தெரிந்தது. எல்லோரின் கண்களும் அவர்கள் மார்புகள், தொப்புள்கள் மீது படர் ஆரம்பித்தன.

கரகாட்டம் ஆரம்பிக்கும்போது ஆட்டக்காரிகள் அங்குமிங்குமாய் கால் மாற்றி வைத்து ஓடியாடுவதற்குக் காரணம், பார்வையாளர்கள் கண்கள் அந்த இரண்டிலும் நிலைக்குத்தி நிற்கக் கூடாது என்பதற்காகத்தான் என்று அம்மா சொல்லியது சரிதான். எல்லாக் கண்களும் அப்படி ஒரே நேரத்தில் மொய்த்துப் பார்க்கும்போது உடலெங்கும் பல புழுக்கள் ஊர்வதுபோல இருக்கும். கொஞ்சம் கண்ணை மூடிக்கொள்ளலாமா என்று தோன்றும். சரோஜா அந்தச் சில நிமிடங்களைத் தாண்டிய பின்தான் நிம்மதியாக ஆடத் தொடங்குவாள். அதுவரை அவள் கைகூப்பி மார்புகளை மறைத்துக் கொள்வாள்.

கோமாளி துள்ளல்போட்டு கரகாட்டக்காரிகள் இருவரையும் நோக்கி, கையை நீட்டி ஆட வருமாறும், இடுப்பில் வந்து அமரும்படியும் பாவனை செய்தபடி துள்ளல் ஆட்டத்தைத் தொடக்கினான்.

தாராளமாய் சாராயம் எல்லோருக்கும் ஊற்றிக் கொடுக்கப்பட்டது கூட்டம் சேரச்சேர கும்மானமும் கூடிக்கொண்டே போனது. மேளக்காரர்களுக்கும் காபியைக் கொடுப்பது போல போதையைப் புகட்டி விட்டார்கள். சுழல் ஆட்டமும் துள்ளல் ஆட்டமும் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தது.

அரசியல் தலைவர் யாரோ வர இருக்கிறார்களாம். செண்டை மேளம் இரண்டு செட்டு வந்து இறங்கியது. கடுகாட்டுக்கு வருகிறவர்களுக்கு நெய் மைசூர்பா மற்றும் மிக்சர், வாழைப்பழம் எல்லாம் குட்டி யாளை வேனில் தயாராக இருந்தது.

சம்பந்தக்காரர்கள் தங்களது சீர்களைக் காட்ட கொட்டு முழக்கத்தோடு ஊரைச் சுற்றிவரத் தயாராளார்கள். சம்பந்தக்காரக் குடும்பத்துப் பெண்கன் வரிசையாகத் தூக்கிக்கொண்டு வர, முன்னால் அவளும் வாணியும் ஆடிக்கொண்டு போக, அவர்களுக்குப் பின்னால் ஒட்டியபடி போதையோடு சிலர் கத்திக்கொண்டே வந்தார்கள். வேண்டுமென்றே நெருக்கி அடித்துக்கொண்டு வந்தவர்களில் ஒருவன் வாணியின் முதுகில் கிள்ளினான்.                        

. வாணி பின்னால் திரும்பி முறைத்துப் பார்க்க, அதில் ஒருவன், "பார்ரா, முறைச்சிப் பாக்குறத, ரோஷம் உள்ள புள்ளதாண்டா" என்றாள். அவள் கொஞ்சம் முன்னால் நகர்த்து நின்று ஆடினாள்,

சிறிது நேரத்தில் இன்னும் கூட்டம் சேர்த்தது. ஒருவன், “டேய, பிகர் சூப்பரா இருக்காடா" என்று சத்தம் போட ஒருவன் விசில் அடித்தான், "நல்ல பிள்னைகள்டா, கலாய்க்காதிங்க" என்று உள்குத்தாக கேவி செய்தான்.

"டேய், அந்தப் பிள்ளைக்கு நூறு ரூபாய் நோட்டை அதுல குத்துடா" என்றான்.

"எதுல 'குத்தச் சொன்னை” என்று இவ்னொருவன் கேலி செய்தான்,

சரோஜாவுக்குக் கோபம் கோபமாய் வத்தது. செட்டுக்காரன் எங்காவது நிற்கிறாளா என்று பார்த்தாள். அவன் எங்கேயும் தென்படவில்லை. அவன் எப்போதும் அப்படித்தான். 'ஆட்டக்காரங்களுக்கு வந்த தலைவிதிக்கு நானென்ன செய்வேன்' என்று எங்காவது ஓடி ஒளிந்துகொள்வான்.

சில்லறைகளின் சில்மிஷம் நிற்கவே இல்லை. சரோஜா வாணி கையைப் பிடித்து முன்னால் விட்டுக்கொண்டு ஆட்டத்தைத் தொடர்ந்தாள்                                                                                                                                                                                                                                              . கோடை வெயிலால் முகத்தில் போட்ட மேக்கப் 'சுள்' என்று அரித்தது. வியர்வைக் கோடுகள் முதுகிலும் மார்புக் கீற்றுக்குள்ளும் தாரையாய் இறங்கியது. கொஞ்சம் எரிச்சலோடு நடந்தபடி ஆடிக்கொண்டு போனார்கள். ரெண்டு தெருக்கள் முழுவதுமாகச் சுற்றித் திரும்ப வேண்டியிருந்தது.

சம்பத்தக்காரர்களின் சாவுச் சீரை ஊருக்குக் காட்டியிட்டுத் திரும்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

சரோஜாவிற்கு வெயிலின் கொடுமையைவிட இழவு வீட்டின் குடும்பத்தார். போதை வெறியோடுபார்க்கும் பார்வையும். கரகாட்டக்காரிகள் எதற்கும் தயாராய் இருப்பவர்கள் போல பாவிப்பதையும்  எற்றுக்கொள்ள முடியவில்லை.

“மேலை ரோஜா கரகாட்டக்குழு' என்றால் சுற்று வட்டாரத்தில் எல்வோருக்கும் தெரியும். அவள் புகைப்படம் வாங்கி அச்சிட்டு போஸ்டர் ஒட்டி, கோயில் கொடைவிழா மற்றும் திருவிழாக்களில் ஆடியது போக இப்போது செத்த வீட்டுக்கு ஆடவேண்டிய சூழல் வந்துயிட்டது. கொரோனா காலத்தில் வேலை எதுவுமின்றிப் போசு, சாவு வீடுகளுக்கும் போய் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாகிவிட்டது. கோயில் கொடை, திருவிழா, செட்டுக்காரன் பெயர் எடுத்திருந்த முத்து, இழவு வீட்டு செட்டுக்காரன் ஆகிப்போனான்.

இதற்கு முன்பு வயதான கும்பங்கள்தான் சாவு வீட்டுக்குப் போகும். சின்னக் கும்பங்கள் சாவு வீட்டுக்குப் போவது என்பது கேவலமானது 'அந்த செட்டு ஒன்றுக்கும் ஆகாதது கழித்துவிடுவார்கள்' அஞ்சுவார்கள்: சரோஜா என்ன புழுங்கினாலும் வேறு வழி ஒன்றுமில்லை வயிறு கடிக்கும் போது வாழ்க்கை எல்லோரையும் தெருவில் வீசிவிடுகிறது;

கலைமாமணி பட்டம் வாங்கிய அம்மாவும் கைக்கும் வாய்க்குமாக வாழ்ந்து தீர்த்ததைத் தவிர எதுவும் சேரவில்லை கலைஞர்களுக்குக் கொடுக்கும் ஓய்வூதியம்கூட கிடைக்கவில்லை.

கலைமாமணி பொன்னம்மா என்றால் அப்படி ஒரு பெயர் உண்டு. சைக்கிளை ஓட்டிக்கொண்டே அதிலிருந்து சரிந்து கண்ணிமையால் ஊசியை எடுப்பது, நோட்டை எடுப்பது, இருகைகளாலும் தீப்பந்தம் சுழற்றுவது, தாம்பானத்தில் நின்றுகொண்டு கரகம் ஆடுவது, கோலம் போடுவது என அத்தனையிலும் சரோஜாவின் அம்மாதான் நம்பர் ஒன். அப்படியான மாமணி பொன்னம்மாவின் மகள் சரோஜா சாவு வீட்டில் ஆடுகிறாள் என்பதைக் கேள்விப்பட்டால் அங்கேயே மண்டையைப் போட்டுவிடும். அம்மாவுக்குத் தெரியாமல்: சரோஜா ஏதோ கிடைக்கிறது என்பதற்காக இப்படி இறங்கிக்கொண்டது அவளுக்கே கேவலமாகத்தான் இருக்கிறது.

கருங்குளத்தில் சாவு வீட்டுக்கு ஆட்ப் போய்க்கொண்டிருந்த போது, எதிராக வந்த பபூன் தாசன், “என்ன சரோஜா, சாவு வீட்டுக்கா ஆடப்போறே? என்னையும் வந்து கூப்பிட்டாங்க நான் வரமாட்டேன் சொத்தை வித்து சாப்பிட்டாலும் சரி, சாவு வீட்டு ஆட்டத்துக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன் போகக்கூடாது சரோ,  ஏன்னா அது விருத்தி இல்லாமே போயிரும்" என்று சொல்விவிட்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தபடி போனான்.

தாசனுக்கு பதில் சொல்ல அவளிடம் என்ன இருக்கிறது. கைக்குட்டையை எடுத்துக் கண்ணைத் துடைத்துக்கொண்டு நடக்கையில் சாவு வீட்டுக்காரன் வந்து, "நீங்க சாவு ஊட்டு கரகசெட்டுதானே" என்றபோது மீண்டும் ஒரு முறை உயிர் போனது மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியவளை, மரத்தில் சேர்த்துக் கட்டி வைத்ததைப் போல இருந்தது.

தென்னை ஓலையைக் கீற்றுகளாகப் பிரித்து தார்க்கட்டில் போல பாடையைப் பின்னீயிருந்தார்கள். பூத்தேரின் வாசனை தெருவெங்கும் பரவியிருந்தது.

தெருவெங்கும் மனிதர்களின் தலைகள் குளிய ஆரம்பித்தன. மூன்று மகன்களும் அவர்கள் பிள்ளைகளும் நீர்மாலை எடுத்துக் கிளம்பத் தயாராக இருந்தார்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் சுடுகாட்டை நோக்கி சாவு ஊர்வலம் கிளம்பியிடும். சரோஜாவும் வாளியும் கொஞ்ச நேரம் அமைதியாக வீட்டுப் படியில் அமர்ந்திருந்தார்கள். செண்டை மேளத்தை ஓங்கியடிக்க ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் சோத்து பிரேதத்தைத் தூக்கி வேனில் வைத்தார்கள். மீண்டும் இருவரும் ஆட்டத்திற்குத் தயாராகி கூட்டத்திற்கு முன்னால் போனார்கள். உடலை வேனில் ஏற்றியதும் கூட்டம் திமிறிக்கொண்டு நகரத் துடித்தது.

போகிற வழியில் மீண்டும் போதை ஏற்றிக் கொண்டவர்கள் துள்ளாட்டம் போட ஆரம்பித்தார்கள்,

சரோஜாவும் வாணியும் ஆட ஆரம்பித்ததும் அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் நெரித்துக்கொண்டு நின்றது. அதில் ஒன்றிரண்டு பேர் சரோஜா, வாணியருகில் நின்று ஆடவும் நெருக்கவும் ஆரம்பித்தார்கள். பாடை வேன் நகர்ந்து போகப்போக அவர்களது தொந்தரவு அதிகமாகியது.

திடீரென எல்லாரும் சேர்ந்துகொண்டு சரோஜாவையும் வாணியையும் நெருக்க ஆரம்பித்தார்கள். யாரும் எதிர்பாராதபோது ஒருவன் வாணியின் மார்பினைப் பிடித்துத் திருகினான். இங்னொருவன் அவளது தோளில் உதட்டை வைத்தான் சரோஜா கோபத்தோடு திரும்பி, அவளை ஆட வேண்டாம் என்று சொல்லி தன்னோடு அணைத்துக்கொண்டாள். அவள் அணைத்துக்கொண்டதைப் பார்த்த குடிகாரர்கள் சரோஜாவின் மேல் விழுந்து இறுக்க ஆரம்பித்தார்கள். இருவரும் கூட்டத்தை விட்டு வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அதற்குள் சரோஜாவின் உடலையும் பதம்பார்த்து விட்டார்கள்.

வாகனம் போய்ச் சேர மாலை 4 மணி ஆகிவிட்டது. அவர்கள் ஒரு நாளும் இப்படிக் காங்கியது இல்லை ஓசிப் போதையில் நல்ல பிள்ளைகள்கூட ஆடாத ஆட்டம் ஆடித் தீர்த்தார்கள். இனி அவர்களால் மூன்று நாளைக்கு எழுந்திருக்க முடியாது. சரோஜாவும் வாணியும் ஒரு வழி ஆகி. வீட்டிற்குத் திரும்பி மேக்கப்பைக் கலைக்க இடம் தேடி ஒரு வீட்டுக்கு. ஒதுக்குப்புறத்தில் கலைத்து உடை மாற்றிக்கொண்டார்கள். எங்கோ ஒளிந்துகொண்டிருந்த செட்டுக்காரன் அப்போதுதான் கண்ணில் பட்டான்

நேரம் எறிக்கொண்டிருந்தது. கடுகாட்டில் இருந்து வீட்டுக்காரர்கள் வந்த பாடில்லை. தீமூட்டிவிட்டு சுடுகாட்டை விட்டு, ஆறுமணி ஆகியும் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.

மயானத்திலிருந்து வந்த ஒன்றிரண்டு  ஊர்க்காரர்கள், 'அண்ணன் தம்பிகளுக்குள்ள சொத்து பிரிக்கணும்னு சொல்லி பேச்சு வார்த்தை நடந்து சண்டையாகிப் போச்சாம்' என்றார்கள். ஒரு வழியாக இரவு 8 மணி அளவில் டார்ச் வெளிச்சத்தில் வீட்டுக்கு வந்தார்கள்,

இன்னும் மேளம் கரகம், செண்டைானவேட்டு ஆட்களுக்குக் கணக்கு முடிக்கணும்' என்ற போது, 'தாய்மாமாக்கள் கருணை வைத்த பின்னேதான் எழவுக் கணக்கு முடித்துப் பணம் கொடுப்பது வழக்கம் என்று ரெண்டு தாய்மாமன் பிள்ளைகளைக் காட்டி இருக்கும் தம்பிகள், பாகத்துக்கு உறுதி சொல்லிட்டு கணக்கு 'முடிங்க' என்றபோது எதுவும் முடிவுக்கு வர மூடியலில்லை.

செட்டுக்காரன் எங்கெங்கோ ஓடிப் பார்த்தும் எதுயும் நடக்கவில்லை. எந்தப் பணமும் கை வந்து சேரவும் இல்லை. சரோஜாவுக்கு வழியும் தெரிந்தபாடில்லை. இன்னும் நேரமானால் ஊருக்குப் போக பஸ் கிடையாது. போகும்போது கார் கொடுப்பார்களா என்று  சொல்ல முடியாது. சண்டை எப்போது தீர்ந்து எப்போது சம்பளம் வாங்கி வீட்டுக்குப் போக என்றாகிவிட்டது.

செட்டுக்காரனை அழைத்துக் கொண்டு போனபோது, சாவு வீட்டுக்காரர்கள், அசிங்கமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

"இந்தா பாருங்க.  நாங்களே சங்கடத்தில கிடக்கோம். ஆட்டக்காரங்க பெருசா ஊருக்குப் போவணும்னு துடிக்கிறீங்க கூப்பிட்டா வந்து படுக்கிற மூதிகளுக்கு இப்ப என்ன அவசரம் வாழுதாம்' என்றார்கள்

சரோஜா, "வீட்டுல.அம்மா சாப்பிடாம் இருக்கும் ராத்திரி போயி சாப்பாடு செஞ்சி கொடுக்கணும்" என்று சொன்ன போது பெரியவர் சிரித்தார்.

"இந்தா பாருங்க அம்மா செத்த ஊடுன்னு பாக்கேன் இல்லாட்டி நடக்குறதே வேற ராத்திரி இங்கே படுத்து எத்திரிச்சி பணம் வாங்கிட்டுப். போங்க. இப்போம் என்ன கொள்ளையா கொண்டு போசுப் போவுது" என்றார்கள்.

இனிமேலும் அங்கு நிற்க ஒன்றுமில்லை. செட்டுக்காரனிடம், "நீ பணம் வாங்கிட்டு வந்து சேர்” என்று சொல்லிவிட்டுபையைத் தூக்கிக்கொண்டு வாணி யோடு கிளம்பினான், ஊர்க்காரர்களிடம் சொல்லி ஆட்டோ பிடித்து வல்லநாடு முக்கு வரை வந்து அங்கிருந்து பேருந்து ஏறி வீட்டுக்கு நடந்து வரும்போது வாணி மெதுவாகச் சொன்னாள்

 இந்தச் செட்டுக்காரன சொல்றான்னு சாவு ஊட்டுக்கு ஆடப்போனது போதும்கா. இனிமே போக வேனாம்கா?" என்றான்.

சரோஜா வாணியைப் பார்த்து இயலாமையான சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.

 "எட்டி, உளக்கு அவனுவ அமுக்குனதுல உடம்பு ஏதும் வலிக்காடி" என்றாள் சரோஜா,

"அதெலாம் ஒன்றுமில்ல அக்கா. இதுக்கு மேலே எம்புட்டையோ

பாத்துட்டோம். நீங்க வீட்டுக்குள்ள போங்க நா வீட்டுக்குப் போய்

சாப்பாடு செஞ்சி எடுத்துட்டு வாரேன்க்கா" என்று சொல்லிவிட்டு அவள் வீட்டை நோக்கிப் போனாள். சரோஜாவுக்கு உடலி கனத்து எதோ செய்வது போல இருந்தது.

"எண்டி, கோயில் கொடை அதுக்குள்ளயா முடிஞ்சிது?" என்று கேட்டாள் அம்மா

“ஆமா எல்ல எழவும்  முடிஞ்சி போச்சி" என்றாள் -சரோஜா,கோபமாக. அதற்கு மேல்  பேச விரும்பாமல் படுக்கையில் சரிந்தாள்.

எவனோ அடிவயிற்றில் விரல்களால் அழுத்தி திருகி கிள்ளியது கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

 ####

 

 

 

உறவின் சுவடுகள்

தெலுங்கில்: பிசுபாடி உமா மகேஷ்வரராவ்

மொழிபெயர்ப்பு: கௌரி கிருபானந்தன்

 

சுவாமிநாதன்  அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டானோ இல்லையோ, அவன் மனைவி சாவித்திரி அருகில் வந்தாள். அவனிடம் தாழ்ந்த குரலில், “அம்மாவுக்கு உங்களிடம் ஏதோ பேசவேண்டும் போலும். அப்பொழுது முதல் குட்டிபோட்ட பூனையாக சுற்றிச்சுற்றி வருகிறாள்” என்றாள்.

‘எதற்காக?’ கேள்விக்குறியுடன் பார்த்தான் சுவாமிநாதன். ‘எனக்கென்ன தெரியும் என்பதுபோல் உதட்டைப் பிதுக்கினாள் சாவித்திரி.

சாமிநாதனின் தாய்க்கு சமீபத்தில் உடல்நலம் சரியாக இல்லாமல் இருந்தது. இப்பொழுதுதான் தேறி வருகிறாள். சாதாரணமாக அவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் குளித்து விட்டு, உணவை முடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் தாயின் அருகில் அமர்ந்து க்ஷேமசமாசாரங்களைபேசிவிட்டு வருவான்.

அன்று மாலையிலிருந்தே. “சாமி இன்னும் வரவில்லையா?” என்று பலமுறை மருமகளிடம் கேட்டுவிட்டாள் நாகலட்சுமி. அதனால்தான் கணவன் வீட்டுக்கு வந்ததுமே, அவனிடம் பேசுவதற்கு மாமியார் துடிப்புடன் இருப்பதாக சொன்னாள் சாவித்திரி. என்னவாக இருக்கும் என்று நினைத்தவன் உணவு கூட அருந்தாமல் தாயின் அருகில் சென்றான்.

“எப்படி அம்மா இருக்கிறது இப்போ?” சாமிநாதன் தாயருகில் கட்டில் மீது அமர்ந்து கொண்டே கேட்டான்.

“எத்தனை நேரம் ஆச்சு நீ வீட்டுக்கு வந்து?” என்றாள் அவள் பதிலுக்கு. தாயின் குரல் ஏனோ புதுமையாக இருப்பது போல் தோன்றியது சாமிநாதனுக்கு.

“இப்பொழுதுதான். பத்து நிமிடங்கள் இருக்கும். நீ மருந்து சாப்பிட்டாயா?” என்றான்.

“ஊம்” என்றவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பிறகு எதுவும் பேசவில்லை.

தாய் ஏதாவது சொல்லுவாளோ என்று எதிர்பார்த்து, ஒரு நிமிடம் கழிந்த பிறகு, “எனக்காக  விசாரித்தாயாமே?” என்றான் சாமிநாதன்.

அந்தம்மாள் பதில் எதுவும் சொல்லாமல் அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். தாயின் கையை தன் கையில் எடுத்துக்கொண்டு அன்புடன் தடவிக்கொடுத்தான்.

“ஏதாவது வேண்டுமா?” என்றான் மென்மையாக.

ஒரு நிமிடம் தயங்கி விட்டு, தாழ்வான குரலில், “நீ சௌத் இந்தியா யாத்திரைக்காக விடுமுறை எடுத்துக் கொண்டு இருக்கிறாய் இல்லையா?” என்றாள்.

ஆமாம் என்றான் சுவாமிநாதன். அவன் எல்.டி.சி.யில் சௌத் இந்தியா டிரிப் போகணும் என்று திட்டம் போட்டிருந்தான். இன்னும் பதினைந்து நாட்களில், குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதும் கிளம்பப் போகிறான்.

“கன்யாகுமரியிலிருந்து திரும்பி வரும்போது பாலக்காட்டுக்கு அருகில் ஒரு ஊர்... அதான் நான் பிறந்த ஊரை, எங்கள் வீட்டை ஒருமுறை காட்டித் தருகிறாயா?” என்றாள் அவள்.

சுவாமிநாதன் திடுக்கிட்டான்.

தன் தந்தை அந்த நாட்களில் அவளை சின்ன வயதிலேயே பாலக்காட்டிலிருந்து வாங்கி வந்து திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் அவனுக்கு நினைவு வந்தது. எப்போதாவது ஒரு நிமிடம் அந்த விஷயத்தைப் பற்றி நினைவு கூறுவதைத் தவிர, தன் தாய் திருபவும் அங்கே போனதும் இல்லை. யாரும் அங்கிருந்து வந்ததும் இல்லை. இங்கே வாழ்க்கையின் பிரவாகத்துடன் கலந்து போய் ஆந்திர மாநிலத்தின் இல்லத்தரசியாக மாறி, இத்தனை வருடங்களுக்குப் பிறக  இப்பொழுது...

சுவாபிமானத்துடன், தயங்கிக்கொண்டே தாய் கேட்டபோது... சாமிநாதனுக்கு இன்னதென்று புரியாத உணர்வு ஏற்பட்டது.

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு கூட ஆந்திர மாநிலத்தில்  ‘கன்யா சுல்கம்’ (விலை கொடுத்து பெண்ணை வாங்குவது) அதிகமாக இருந்தது. நிறைய பணம் கொடுத்து கல்யாணத்துக்கு பெண்ணை வாங்க முடியாதவர்கள், கேரள மாநிலத்திற்குச் சென்று, பாலக்காட்டிலிருந்து  பெண்குழந்தைகளை மலிவாக வாங்கி வருவது வழக்கம். நாகலட்சுமி அதுபோல் ஐந்து வயதிலேயே ஒரு தெலுங்கு வீட்டு இல்லத்தரசியாக ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து வரப் பட்டாள்.

வந்த பிறகு அவளுக்கு இதுதான் உலகமாகி விட்டது. ஒரு மஞ்சள் கயிறு... பிறந்தவீட்டுடன், உடன் பிறப்புகளுடன், உற்றார் உறவினர்களுடன் அவளுக்கு இருந்த பந்தத்தை, தொடர்பை அறுத்து விட்டது. அங்கிருந்து வந்து அவளை பார்த்தவர்கள் யாரும் இல்லை. இவளையும் அழைத்துப் போய் காண்பித்தவர்கள் யாரும் இல்லை. இளம் பருவத்தில் எப்பொழுதாவது பிறந்தவீட்டு பக்கம் போய் பார்த்து விட்டு வரவேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டாலும்...

கணவரின் நாட்டாமையில் புகுதவீட்டார் அந்த எண்ணத்தை மொட்டிலேயே கிள்ளி எறிந்து விட்டார்கள்.  அதன் பிறகு சம்சார சாகரத்தில் மூழ்கி அவள் தன் பிறப்பின் கதையையே மறந்து விட்டாள்.

கணவன் இறந்து போன பிறகு மகன் தன்னை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறான். இத்தனை நாட்களுக்குப் பிறகு மகன் யதேச்சையாக சௌத் இந்தியா யாத்திரை போகப் போகிறான். சற்று ஏறக்குறைய அந்த மாநிலத்தின் வழியாக பயணம் செய்யப் போகிறான். பல வருடங்களாக உறக்க நிலையில் இருந்த விருப்பம் அவளுள் திரும்பவும் விழித்துக் கொண்டு விட்டது.

“அது வந்து... உனக்கு எந்த இடைஞ்சலும் இல்லை என்றால்தான்” என்றாள் அவள் மேலும் தயங்கிக் கொண்டே.

அதைக் கேட்டதும் சாமிநாதன் சிலிர்த்து விட்டான். அந்த ஒரு வார்த்தையில் அவனுக்கு பல அர்த்தங்கள் தென்பட்டன.

கேரளநாட்டுப் பெண்ணாக இருந்து, பிறந்த வீட்டாரின் இல்லாமை காரணமாக, வேறு மாநிலத்தாருக்கு விற்கப்பட்டு, தன் வீட்டாரிடமிருந்து தொலைவாக வந்து, இன்றுகூட வேற்று மனிதர்கள் வீட்டில் வாழ்ந்து வருவது போல் நினைத்து வரும் தன் தாய், மிகுந்த தயக்கத்துடன் தன் வீட்டாரை பார்க்கணும் என்று மனதில் இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்திய விதம்... சாமிநாதனை கலங்கடித்து விட்டது.

இத்தனை வருடங்களுக்கு தாயின் நன்றிக்கடனை தீர்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு சந்தோஷத்தில் திளைத்து விட்டான் சுவாமிநாதன்.

“போகலாம் அம்மா. கட்டாயம் அழைத்துப் போகிறேன்” நம்பிக்கையுடன் சொன்னான் சாமிநாதன். அந்த வார்த்தைக்கு உள்ளூர ஏற்பட்ட சந்தோஷத்தில் அந்த தாய்க்கு தொண்டையை அடைத்துக் கொண்டு விட்டது. அப்படியே மௌனமாக இருந்து விட்டாள்.

மறுநாள் அலுவலகத்திற்குப் போனதும். கேரளாவுக்கு போய் வந்தவர்களை எல்லாம் பாலக்காட்டிற்கு போகும் வழியைப்பற்றி, அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் சாமிநாதன். யாராலும் சரியாக தகவல் சொல்ல முடியவில்ல. ஓரிருவர் மட்டும்...

“முதலில் பாலக்காட்டிற்கு போ. அதன் பிறகு சுற்றுபுறத்தில்  இருக்கும் ஊர்களைப் பற்றி விசாரி . ஏதாவது சமாசாரம் கிடைக்காமல் போகாது” என்றார்கள்.

இந்த அறிவுரை நன்றாக இருப்பது போல் தோன்றியது சாமிநாதனுக்கு. அதுபோலவே முதலில் சென்னை, ஸ்ரீரங்கம், மைசூரு, பெங்களூர் முடித்துக்கொண்டு, ராமேஸ்வரம், கனியாகுமரி எல்லாம்  பார்த்து விட்டு, திரும்பி வரும்போது பாலக்காட்டிற்கு போய்ச் சேர்ந்தார்கள்.

வந்து விட்டானே தவிர, ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு எங்கே போவது என்றும், என்ன செய்வது என்றும் புரிபடவில்லை சாமிநாதனுக்கு. நாகலட்சுகிக்கும் தங்கள் ஊர் பாலக்காட்டுக்கு வெகு அருகில் என்று தெரியும். அவள் கணவன் அடிக்கடி அந்த ஊரின் பெயரை சொலிக் கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுது வயதாகி விட்டதால் அவளுக்கு அந்த பெயர் நுனி நாக்கில் இருகிறதே தவிர சொல்லத் தெரியவில்லை. சாமிநாதன் சற்று யோசித்து, புக்கிங் கிளார்க் அருகில் சென்று, தங்களுடைய நிலைமையை விளக்கினார். அவன் உதவியுடன் பாலக்காட்டிற்கு வெகு அருகில் இருக்கும் குக்கிராமங்களின் பெயர்களை எழுதிக்கொண்டு வந்து தாய்க்கு ஒவ்வொன்றாக படித்துக் காண்பித்தான். ‘வெஞாபொடி’ என்ற பெயரைக் கேட்டதும், அவள் சந்தோஷம் தாங்க முடியாமல், “அதுதான் அதுதான்” என்றாள்.

சாமிநாதன் அந்த ஊரைப்பற்றி புக்கிங் கிளார்கிடம் விசாரித்தான். வெஞாபொடி ஐந்து மைல் தொலைவு கூட இல்லை என்றும், அந்த ஊருக்கு போவதற்கு தனியார் பேருந்து சர்வீஸ் தவிர வேறு வழி இல்லை என்றும் தெரிவித்தான். மொழி கொஞ்சம் இடைஞ்சலாக இருந்தாலும், எப்படியோ சமாளித்து, மொத்தத்தில் பேருந்தை பிடித்து விட்டான் சாமிநாதன். வெஞாபொடியில் குடுபத்தாருடன் இறங்கினான் சாமிநாதன், அங்கே பெரிய  பிரச்னை எதிர்பட்டது. அந்த குக்கிராமத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒருவர் கூட கண்ணில் படவில்லை.

ஆண்கள் கட்டம்போட்ட லுங்கியிலும், பெண்கள் தலைப்பு போடாத புடவையிலும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் திண்டாடிய பிறகு ஆங்கிலம் தெரிந்த பெரியவர் ஒருவர் கிடைத்தார். ஒய்வு பெற்ற ஆசிரியர் அவர். சாமிநாதன் தங்கள் விஷயத்தை விளக்கினான். எல்லாம் கேட்டு விட்டு அவர் இரக்கத்தோடு அந்தம்மாள் பக்கம் பார்த்தார். “இத்தனை ஆண்டுகள் கழித்து கணடுபிடிப்பது  ரொம்ப கஷ்டம்” என்று சொன்னார்.

அந்த ஊரில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் பெண் குழந்தைகளை விற்றவர்கள்தானாம்! அந்த நாட்களில் இருப்பது போல் இல்லை என்றாலும், இன்றைக்கும் நிலைமை அதுபோல்தானாம்!!. ஒரு நிமிடம் பொறுத்து அவரே மேலும் சொன்னார். “குறைந்தபட்சம் அந்த வீட்டு அடையாளம் ஏதாவது சொன்னால், இருக்கும் பிராம்மண குடும்பங்களில் விசாரிக்கலாம்” என்றார்.

சாமிநாதன் தாயிடம் மேலும் சில விவரங்கள் கேட்டான். எத்தனை முயற்சி செய்தாலும் அவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. திடீரென்று அவளுக்கு கணவன் பலமுறை சொல்லி வரும், “உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் நாகலிங்கப் பூக்களை பொறுக்கிக் கொண்டிருந்த போதுதான் உன்னைப் பார்த்தேன்” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே கோவிலைப் பற்றியும், நாகலிங்க மரத்தைப் பற்றியும் மகனிடம் சொன்னாள். அந்தப் பெரியவர்  சிரித்து விட்டார்.

“ஊர் சிறியதுதான் என்றாலும் நிறைய கோவில்கள் இருக்கின்றன. இருந்தாலும் பார்ப்போம், வாங்க” என்று வழி நடந்தார். அவருக்கும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. இரண்டு மூன்று கோவில்களை தேடிய பிறகு நான்காவது கோவில் உண்மையாகி விட்டது. அதனைப் பார்த்ததுமே அந்தம்மாளுக்கு மங்கலாக முற்பிறவியின் நினைவு வந்தாற்போல் இருந்தது. கோவிலுக்கு இடது புறம் இருந்த வீட்டின் பக்கம் சந்தேகமாக பார்த்துக் கொண்டே. “அதுவாகத்தான் இருக்க வேண்டும்” என்றாள். ஆனால் அது ஓட்டு வீடு என்று நினைவு. அது இப்பொழுது மச்சு வீடாக இருந்தது.

“விசாரித்துப் பார்ப்போம்” என்று அவர் உள்ளே போனார். சாமிநாதன் குடும்பத்தினர் கூட உள்ளே போனார்கள்.

உள்ளே ஹாலில் கிழவர் ஒருவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தார். வாத்தியார் அவரிடம் மலையாளத்தில் ஏதோ பேசினார். அந்த பெரியவர் எழுந்து நின்று ஒரு முறை சாமிநாதனின் தாயாரை பார்த்தார்.

தனக்கு ஒரு தம்பி இருக்க வேண்டும். ஒருக்கால் இவன்தானோ என்னவோ. ஜாடை தெரிகிறது. அவளுள் நம்பிக்கை ஏதோ வலுபெற்றுக் கொண்டிருந்தது, அந்த வீட்டின் சூழலை பார்க்கும் போது. தன்னையும் அறியாமல் அந்தம்மாளின் வாயிலிருந்து “அப்பூ!” என்ற சொல் வெளிவந்தது.

“ஆமாம். நான்தான். என்னை வீட்டில் எல்லோரும் ‘அப்பு’ என்று அழைப்பார்கள். அப்புக்குட்டி!” என்றார் அவர் மலையாளத்தில். வாத்தியார்  அதனை மொழிபெயர்த்துச் சொன்னார்.

அதற்குள் வீட்டிலிருந்த எல்லோரும் அங்கே கூடி, வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.

நாகலட்சுமி திடீரென்று சந்தேகம் வந்தது போல் ஹால் நடுவில் சென்று, “இங்கே ஊஞ்சல் இருக்க வேண்டும்” என்றாள்.

“ஒருமுறை உத்தரம் உடைந்து விட்டது. அப்போது எடுத்து விட்டோம்” என்றார் அவர். அந்தம்மாளுக்கு ஏதேதோ நினைவுகள் சூழ்ந்துகொள்ள, தடுமாறும் நடையுடன் வீடு  முழுவதும் சுற்றி வந்தாள். கொல்லையில் வாதாம் மரத்தை, பவழமல்லி மரத்தைப் பற்றி விசாரித்தாள். பார்ப்பவர்களுக்கு ஏதோ முற்பிறவியின் தொடர்பு போல் இருந்தது. ஒருமுறை புயல் வந்து ஓட்டு வீடு சரிந்து விட்டதால், மச்சு வீடாக மாற்றிய விஷயத்தை சொன்னார் அவர்.

அவருக்கும் தன் சிறுவயதில் ஒரு அக்காவை யாருக்கோ விற்று விட்டதாக அக்கம்பகத்தார் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. அவளிடம் தன்னுடைய ஜாடை இருப்பது தென்பட்டது.

“அம்மா அப்பா?” என்று கேட்டாள் அவள்.

அவர்கள் போய் பல வருடங்கள் ஆகி விட்டது என்றார் அவர். நான்கு அக்காக்கள், இரண்டு அண்ணன்கள் கூட போய்ச் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார். ஒரு தம்பி மட்டும் வேறு ஊரில் வேலை பார்த்து வருவதாகச் சொன்னார்.

‘தனக்கே எழுபது வயது ஆகும் போது, தனக்கு மேல் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்?’ நினைத்தாள் அவள். இத்தனை பேர் போய் விட்டார்கள் என்று தெரிந்தபோது அவளுக்கு துக்கம் வந்தது. சற்று பொறுத்து அவள் ஒரு அறைக்குள் சென்று அங்கே சுவற்றில் பிறைக்காக தேடினாள். அது தென்பட்டதும், அங்கேயே சரிந்து ஹோவென்று அழத் தொடங்கினாள். சின்ன வயதில் அந்த பிறையில் அவள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடுவாள். ஒரு முறை அந்த பிறையில் விளக்கை வைக்கும் போது கை சுட்டு விட்டது. அந்த வடு இன்றும் இருக்கிறது. பிறந்த மண்ணிலேயே வாக்கப்பட்டு கரையேறும் பாக்கியம் தனக்குக் கிடைத்து இருந்தால்...

சொந்த பந்தங்களுக்குத் தொலைவாக, மனதளவில் இத்தனை தனிமையுடன் வாழ வேண்டிய நிலை இருந்திருக்காது இல்லையா என்று நினைத்தாள். பிறப்பாலேயே ஏழை ஒருவனின் வயிற்றில் பிறந்தால், காய்ந்த சருகுபோல்  அடித்துச் செல்லப்பட வேண்டியதுதான். இதுதான்  சமுதாயத்தின் விதி போலும் என்று துக்கப் பட்டாள்.சிறிய கிராமம் என்பதாலோ என்னவோ, இவர்களின் சமாசாரம் உடனடியாக ஊரில் தெரிந்து விட்டது. சில பேர் வீட்டு வாசலில் குமி கூடி விட்டார்கள். வாத்தியார் சிறிது யோசித்து விட்டு அந்த ஊரிலேயே மூத்தவரான தொண்ணூறு வயது கிழவரை அழைக்கச் செய்தார்.

அவர் இளமையில் இருந்தபோது இதுபோல் கல்யாணத் தரகராக வேலை பார்த்து கால் காசு சம்பாதித்து வந்தார். அவர் அருகில் வந்து, அரைகுறை பார்வையுடன் அந்தம்மாளை கூர்ந்து பார்த்தார். நன்றாக நினைவுப்படுத்திக் கொண்டு...

“நீயாம்மா நாகலட்சுமி!” என்று  அன்புடன் விளித்து அணைத்துக் கொண்டார். அந்த மொழி புரியாவிட்டாலும், அந்தத் தொடுகையில் இருந்த அன்பு அவளுக்குப் புரிந்தது.

“சிறுவயதில் இருந்தபோது இவளை நான் இந்த கையால்தான் தூக்கிக் கொண்டேன். இந்தக் கையால்தான் ஒரு தெலுங்குக்காரனுக்கு நூற்றி அறுபது ரூபாய்க்கு விற்றேன்” என்று ஏதேதோ சொன்னார். வாத்தியார் இவர்களுக்கு புரிவது போல் சொன்னார்.

அந்தப் பெரியவர் அப்புவை அழைத்து, “இந்தாடாப்பா  உன் அக்காள் நாகலட்சுமி. உனக்கு நினைவு தெரிவதற்குள் அவள் இந்த வீட்டை  இந்த ஊரை விட்டு போய் விட்டாள்” என்று இருவரின் கைகளையும் இணைத்தார் அதுவரையில் வேற்று மனிதர்கள் போல் இருந்து விட்ட அவ்விருவருக்கு நடுவில் அந்த நிமிடம் அக்கா தம்பி என்ற உணர்வு பீரிட்டு வந்தது. ஒருவரின் மொழி அடுத்தவருக்குத் தெரியாது.

‘அக்கா!” என்று அவர் விளிக்கவில்லை. ‘தம்பி!” என்று அவளும் அழைக்கவில்லை. ஆனாலும் இருவரின் கைகளும் பலமாக பற்றிக் கொண்டிருந்தன. இருவரின் கண்களிலிருந்தும் பொலபொலவென்று கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

ஊமை மொழியில் அவர்கள் தம் உணர்வுகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நடுநடுவில் கிழவர் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். வாத்தியார் ஆங்கிலத்திலும், சாமிநாதன் தெலுங்கிலும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்த அபூர்வமான சங்கமத்தை எல்லோரும் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் பொறுத்து ஒவ்வொருவராக விடைப்பெற்று கிளம்பத் தொடங்கினார்கள். ‘எல்லாம் கடவுளின் சித்தம்’ என்று பழியை கடவுள் மீது தள்ளி விட்டார்கள்.

“உன் தம்பியின் மனைவி இவள்தான், இவன் தான் உன் மருமகன்” என்று அறிமுகப் படலம் முடிந்தது. தம்பியின் மனைவி எல்லோருக்கு காபி கலந்து எடுத்து வந்தாள். அந்த காபி இவர்களுக்கு ருசிக்கவில்லை. ஆனாலும் ஏதோ தெரியாத பாசப் பிணைப்பு வெளிப்பட்டது.

நாகலட்சுமி கேட்க நினைத்ததை எல்லாம் கேட்டாள். தம்பியால் சொல்ல முடிந்தவற்றை எல்லாம் சொன்னான். வாத்தியார் துபாஷியாக ஒத்துழைப்பு தந்தார். மனம் விட்டு பேச வேண்டியதெல்லாம் முடிந்து விட்டன. எல்லோரும் பதுமையாக நின்று விட்டார்கள். திரும்பவும் மனம் முழுவதும் வெறுமை சூழ்ந்து கொண்டது.

அவர்களைப் பார்த்தால் நான்குநாட்கள் தங்கி இருக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் போல் தோன்றவில்லை. அக்கா தம்பி இருவரும் இன்றோ நாளையோ உதிர்ந்து விடும் இலைகள் போல் இருந்தார்கள்.  தலைமுறை இடைவெளி வந்து விட்டது. ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவில் வாசம். அடிக்கடி வந்துபோகும் விவகாரம் இல்லை. மொழி மற்றும் கலாசார வேறுபாடு. குறைந்த பட்சம் கடிதப் போக்கு வரத்து வைத்துக் கொள்ளும் யோக்கியதை கூட இல்லை.

இந்த பந்தம் பிணையப் போவது இல்லை நீடிக்கும் வாய்ப்பும் இல்லை. நாகலட்சுமி பாரமான மனதுடன் அந்த வீட்டை மூன்று முறை வலம் வந்தாள். நெருங்கியவர்களை எல்லோரையும் ஒரு முறை அன்புடன் அணைத்துக் கொண்டாள். காலடி எடுத்து வைத்து வாசற்படியைத் தாண்டினாள். பேருந்து ஊர் எல்லையைத் தாண்டியதும், “அடுத்த பிறவி என்று இருந்தால் பெண்ணாக படைக்காதே சாமி!” என்று கடவுளிடம் வேண்டிகொன்டாள் நாகலட்சுமி.