Friday, 29 May 2015

நான் ரசித்த ஜானகிராமன் இலக்கியவாசல் இரண்டாம் நிகழ்வாக "நான் ரசித்த   தி.ஜானகிராமன்" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலைய அரங்கில் 23.05.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது!

தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய இலக்கியவாசல் சுந்தரராசன், வந்திருந்த சான்றோர் பெருமக்களை அன்புடன் வரவேற்று தி.ஜா.வின்  வாழ்க்கைக்  குறிப்பைச்  சொல்லி அவர் படைப்புகளின் சிறப்புகளை எடுத்துரைத்து, பார்வையாளர்களைப் பேச அழைத்தார்! 


 உழைக்காமலே குத்தகை வருமானத்தில் வாழ்க்கை நடத்தி ஏழ்மையில் 
  வாழ்ந்து வந்தாலும் வீம்பாக நடந்துகொள்ளும்  ராமதுரை மாமாவின் குணாதிசயங்களை நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தார்!  எதிர்வீட்டு பெண் திருமணத்தை கிட்டத்தட்ட நிறுத்திவிடுகிறது அவரது வாய்சவடால். அதையும் சமாளித்து  திருமணம் செய்து கொண்டுபோகும் பெண்ணைப்பற்றிய கதை இது.  இந்த கதையைச்   சொல்வதே அந்தப்  பெண்தான் என்பது  கதையின் கடைசியில் தெரிய வருவது மிகவும் சுவாரசியமான ஒன்று!
மோகமுள் நாவலில் எல்லோரும் பாபு ஜமுனா உறவையே சொல்லுகிறார்கள். ஆனால் தான் ரசித்தது   தி.ஜா.எப்படி இயற்கையின் ரசிகராயிருந்தார் என்பதும் (வாழை மரம் வெட்டப்பட்ட பிறகு அதன் அடிப்பகுதியில் அழகாய் அமைந்துள்ள துவாரங்கள் அதிசயம்), ரங்கண்ணாவுடனும் நண்பனுடனும்  (ராஜம்)  உரையாடல்களில் வாழ்க்கையையும் மனிதர்களையும் அலசும்  சிறப்பையும்  சொல்லி, தி.ஜா.வின் படைப்புக்களில் தனது ஆராய்ச்சி தொடர்வதையும் சொல்லி மகிழ்ந்தார்!ஒரு நாவல் எப்படி உருவானது என்று தி.ஜா.தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளதை எடுத்துரைத்தார்! எதிர் வீட்டு  கிழவரின் இளம்பெண் கல்யாணமும், தனது மகன் குடும்பத்தையே வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு, இளம் மனைவியுடன கிழவர் தனிக்குடித்தனம் ஒருவருடம் நடத்திவிட்டு மரணம் அடைந்த நிகழ்வையும் குறிப்பிட்டார்.  தன்னை விட எட்டுவயது அதிகமான அழகும், அமைதியும், புத்திகூர்மையும் உள்ள பெண் மீது தான் கொண்ட ஒரு தலை  மோகம் தான் மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது! “இந்த ஞாபகங்கள் ,என் ஆசைகள் ,நப்பாசைகள் ,நான் எப்படி இருந்திருக்க வேண்டுமென்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள்,  பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாக சேர்ந்து நாவலாக உருவாயின “ என்று ஜானகிரமனே குறிப்பிட்டுள்ளார்  என்பதைப்  பகிர்ந்துகொண்டார்!


திண்ணையில் அமர்ந்து கொண்டே "எழுந்து வந்தால் தொலச்சுடுவேன்"  என்று எல்லோரையும் மிரட்டும் ஒரு பாத்திரம், இறுதியில் வீட்டிற்குள் போகவே இருவர் தூக்கிச்செல்ல வேண்டியிருக்கும் நிலையில் இருக்கிறார் என்பது  கதை  முடிவில்   தெரியவரும். பாத்திரப் படைப்பும் சொல்லும் விதமும் மிகவும்  ரசிக்கத்தக்கது என்றார் . 

               
இந்த வீடு விற்பதற்கு இல்லை என்று ஒரு டாக்டர் சொல்லிக்கொண்டே இருப்பதுடன் தொடங்கும் இந்தக் குறுநாவலில், அந்த    டாக்டர் தனது மனைவி மிகவும் அழகாய் இருப்பதை ரசித்துக்கொண்டே இருப்பார். கம்பௌண்டருடன் அவளுக்குத்   தொடர்பு ஏற்பட்டுப்  போகிறது .டாக்டர் அப்போதும் மனைவியைத்  தொடாமலே அவளது அழகை ஆராதனை செய்வது கொடுமை. இக்கதை மூலம் ஒரு படிப்பினையை தி. ஜ சொல்கிறார் 


 
இரு முரண்பட்ட தலைப்புகளிள் எழுதப்பட்ட சிறுகதைகள்  இரண்டையும் ஒப்பிட்டு அழகாகப் பேசினார். 


."குளிரில் "-  80 வயது கிழவி கதவைத்  தட்டினால் அவள் வீட்டில் திறக்க மாட்டார்கள் .அவ்வப்போது அடியும் வாங்கும் பாட்டிக்கு வக்காலத்து வாங்கிய பக்கத்து வீட்டுக்காரர்  உபசரித்து தங்கள் வீட்டில் தூங்க வைத்தால், கிழவி தனது வீட்டுப்  பெருமை பேசுகிறதாம்!

"வெய்யிலில்" - செல்ல மகள் வெய்யில் நேரத்தில் அவசரமாக ஊருக்கு கிளம்பி இரயிலடி செல்ல ,அவள் மறந்து விட்டுப்போன துணியை எடுத்துக்கொண்டு வெய்யிலில் ஓடும் மனிதரைப்  பார்த்து  டீக்  கடைக்காரர் , ‘இந்தத் துணியாவது  உன்னிடம் இருந்து அவள் பிரிவை எளிதாக்கட்டுமே  என்பது சிறப்பு!
இளம்பெண் விசாலியை அவளது சின்ன மாமனார் வந்து அவள் கணவர் வீட்டிற்கு சட்டென்று அழைத்தது அனைவருக்கும் கவலைதர, விளையாடிக் கொண்டிருந்த விசாலி சட்டென்று சின்ன மாமனாருடன் கிளம்பிச் செல்கிறாள் ஊருக்கு . வீட்டிலோ அவள் அப்பா இல்லை. அத்தையிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்! வெளியில் சென்றிருந்த அப்பா வந்து அவள் பின்னாலயே போய் வலங்கிமானில் சாப்பாடு செய்வித்து விசாலியிடம் கையில் திணிக்கிறார்.... அவளது ஆசை சோழிப் பெட்டியை! விசாலிக்கு வயது 10 ! அந்தப் பத்து வயதில் அப்படி ஒரு தீர்மானமா?தி.ஜாவின் புகழ் பெற்ற "அம்மா வந்தாள் " நாவலைப் பற்றி மிக விரிவாக, உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். தஞ்சாவூர் ஜில்லாவின் மண்வாசனை தவழும் இந்த நாவலின் அப்பு, வேதம் படிக்க 4 வயதில் வேத பாடசாலை சென்றவன், வேதம் கற்று  இளைஞனாகத் தன் வீடு திரும்ப முயலும்போது,  வேத பாடசாலையில் உள்ள இளம் விதவை இந்து அவனை விரும்புவது கண்டு அதிர்ச்சி அடைகிறான். அவன் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் கேட்காத இந்து அவனை வலுக்கட்டாயமாகக்  கட்டிப்பிடிக்கிறாள் .அவளைத்   தள்ளிவிட்ட அப்புவை பார்த்து 'உன் அம்மா என்ன யோக்கியமானவளா?" என்று கேட்டவுடன் அப்பு திகைத்து போகிறான் .

அவன் அப்பா தண்டபாணி தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவன் அம்மா அலங்காரம்  உண்மையிலேயே அழகானவள் .ஆனால் அவங்க வீட்டுக்கு வரும் பணக்காரர் சிவசுவிடம் அவளுக்கு கூடாநட்பு ஏற்பட்டு விடுகிறது . இதை அவள் கணவன் உள்பட யாருமே கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள். 

அப்புவிடம் பாவமன்னிப்பு கேட்கும் அம்மா அலங்காரம் :உன் வேதத்தாலும் என் பாவத்தை போக்க இயலாது .என்னைப் போன்றவா எல்லாம் காசியிலே போய் மூலையிலே முக்காடு போட்டு உக்காந்து சாகவேண்டும் என்கிறாள் .. இந்த நாவல் தி.ஜா.வை ஜாதிப்  பிரஷ்டம் செய்யும் அளவுக்குப்  பேசப்பட்டதும் உண்மைஒரு சாமியாரின் அருளை வேண்டி அவருக்கு பிடி கருணை அளிக்க தில்லுமுல்லு செய்யும் ஒரு சிறு வியாபாரி (பிடிகருணை), வறுமையின் இயலாமையால் கல்கத்தாவில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்  வேலைக்குப் போகும் ஒரு சிறுமிக்கு தன்னால் இயன்ற அன்பைக்கட்டும் வகையில் ஒரு ஆரஞ்சு அளிக்கும் பாலகன் (சிலிர்ப்பு). 
தனது தாத்தா மகாநாமரை பழிவாங்க அவரைப் போரில் வெல்லும் அரசன் விடூடபன் (தாத்தாவும் பேரனும்) ஆகிய கதைகளைக் குறிப்பிட்டார்.
தான் கண்ட மனிதர்களையும் நிகழ்வுகளையும் சிறு சிறு உரையாடல்கள் மூலமும் எளிய வருணனைகள் மூலமும் மிக எளிதாகச்  சொல்லி விடுவது தி. ஜா வின் சிறப்பு என்று குறிப்பிட்டார். 
அவர் கதைகளீல் வரும் கூடா நட்பைப் பற்றியும் குறிப்பிட்டார். அதனால் அந்தக் காலத்தில் சில இல்லங்களில்  ஆனந்தவிகடன் வாங்கிவந்தவுடன் தி.ஜானகிராமன் , ஜெயகாந்தன் கதை உள்ள பக்கங்களையும் பிய்த்து விட்டுத்தான் தங்கள் குழந்தைகளுக்குப் படிக்க கொடுப்பார்களாம்!.      
வந்திருந்து தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் ஏனைய பார்வையாளர்களுக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கிருபானந்தன். 
.

2 comments:

  1. நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்து இந்த வலைப்பக்கத்தில் பதிப்பிக்கவும்.

    ReplyDelete